காவிரி மேலாண்மை அமைக்கவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் : அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன்..


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வோம் என அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன் பேசியுள்ளார்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட கெடு நாளையுடன் முடிவடையவுள்ளது. இதனால் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், வாரியத்துக்கான பணிகள் எந்தநிலையில் இருக்கின்றன என்பது குறித்த எந்தத் தகவலும் வெளியாகவில்லை. மேலும், கர்நாடகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால், வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு இழுத்தடிக்கும் என்றே அரசியல் கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுவருகின்றன.

இதற்கிடையே, மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்றத்தில் 15 நாள்களுக்கும் மேலாகப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் அ.தி.மு.க எம்.பி-க்கள். அவர்களது போராட்டத்தால் நாடாளுமன்றம் முற்றிலும் முடங்கியுள்ளது. எனினும், இவர்களது போராட்டத்துக்கு செவி கொடுக்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், அ.தி.மு.க எம்.பி-க்கள் தற்கொலை செய்துகொள்வோம் என நவநீதகிருஷ்ணன், மாநிலங்களவையில் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் அரசியல் சாசனம் எதற்கு. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாமல் இழுத்தடிப்பது சட்டத்தின் ஆட்சியா என்ற கேள்வியை எழுப்புகிறது. தமிழகத்தில் எங்களை ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள். மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அ.தி.மு.க எம்.பி-க்கள் தற்கொலை செய்துகொள்வோம்” என்றார்.

நவநீதகிருஷ்ணன் கருத்து குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “நவநீதகிருஷ்ணன் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு பேசியுள்ளார். அது அவரது தனிப்பட்ட கருத்து. உணர்ச்சிவசப்பட்டு அவர் பேசியதில் தவறு இல்லை. மேலாண்வாரியம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்” என்றார்.

சட்டப் படிப்பு சர்ச்சைக்கு விவேக் ஜெயராமன் விளக்கம்…

மேற்குவங்க முதல்வர் மம்தா – சோனியா சந்திப்பு..

Recent Posts