காவிரியில் வெள்ளம்.. கடைமடைப் பகுதிக்கோ தண்ணீர் செல்லவில்லை… வீணாகும் வெள்ளநீர்…

காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டாலும், கடைமடைக்கு தண்ணீர் சென்று சேராத அவலநிலை நீடிக்கிறது. மற்றொரு புறம், இயற்கையின் கொடையால் பெருக்கெடுக்கும் நதிநீரைச் சேமித்து வைக்க வழியின்றி, அனைத்தும் கடலில் கலக்கிறது.

தொடர்மழை காரணமாக கர்நாடகா வேறு வழியின்றி காவிரியில் திறந்து விடும் தண்ணீரால், மேட்டூர் அணை இதுவரை 2 முறை தனது முழு கொள்ளளவை எட்டியது. 

இந்நிலையில், தற்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற அதிகப்படியான நீர் திறக்கப்படும் போதிலும் கூடதஞ்சை, நாகை மாவட்டங்களின் கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீிர் சென்றடையவில்லை என விவசாயிகள் வேதனைப் படுகின்றனர். அதுமட்டுமின்றி கர்நாடகாவில் இருந்து வேறு வழியின்றி திறந்துவிடப்படும் 1 லட்சம் கனஅடிக்கும் கூடுதலான நீர். எங்குமே தேக்கப்படாமல் கடலில் சென்று கலப்பதாகவும் விவசாய அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கரைபுரண்டோடும் வெள்ளம் ஒருபக்கம், காய்ந்து கிடக்கும் வயல்வெளி மற்றொரு பக்கம் என முரண்பட்டு காட்சியளிக்கிறது தமிழகத்தின் நீர்சார் நிலவரம். பாசனக் கிளைவாய்க்கால்கள் பல இடங்களில் தூர்வாரப்படாததே கடைமடை பகுதிவரை தண்ணீர் சென்று சேராததற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நீரை சேமிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரியுள்ளனர்.

 

Cauvery water goes on waste