மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடுங்கள் : பிரதமர் மோடிக்கு கிரண் பேடி கடிதம்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடுமாறு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு கடந்த மார்ச் 29-ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு மௌனம் காத்து வருகிறது.

மத்திய அரசின் இந்த செயலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. அதேநேரம், மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

இந்தநிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடுமாறு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியில் அமைந்துள்ளது காரைக்கால் பகுதி. அந்த பகுதியின் விவசாயப் பணிகள் காவிரியில் இருந்து சரியான சமயத்தில் தண்ணீர் திறந்துவிடுவதை அடிப்படையாக வைத்தே நடைபெறுகின்றன.

காவிரியில் இருந்து மிகக்குறைந்த அளவே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், காரைக்கால் பகுதியில் விவசாயப் பணிகள் வெகுவாகக் குறைந்துள்ளதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், புதுச்சேரி மாநிலத்திற்கு காவிரியிலிருந்து 7 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டுமென உத்தரவிட்டது. நதி நீர்ப்பங்கீடு முறையாக நடக்க காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட வேண்டும்.

நதிநீர் பங்கீட்டை முறைப்படுத்த 6 மாதத்திற்குள் ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவில் விளக்கம் கேட்டு மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக 3 மாதங்கள் அவகாசம் கேட்டதாகவும் அறிகிறேன். உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட, காவிரி நடுவர் மன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என காரைக்கால் விவசாயிகள் நீண்ட நாள்களாக காத்திருக்கின்றனர். கூடுதல் அவகாசம் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, விவசாயிகள் மத்தியில் பதட்டத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க அரசின் உரிய துறைகளுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.