முக்கிய செய்திகள்

சிபிஐ குற்றப்பத்திரிகை கசிந்த விவகாரம் : டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வழக்கு..


ஏர்செல் மாக்சிஸ் விசாரணை தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் காணப்படும் விவரங்கள் ஊடகங்களுக்கு கசிந்தது தொடர்பாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஏர்செல் மாக்சிஸ் ஊழல் வழக்கில் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையின் சில விவரங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டதாக ப.சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று வழக்கு பதிவு செய்துள்ளார்.

அவரது மனுவில், சிபிஐ குற்றப்பத்திரிகையை ஊடகங்களுக்கு வெளியிடுவதன் மூலம், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த விரும்புவதாகவும், நீதி விசாரணையை விடுத்து ஊடகங்கள் மூலம் வெற்றி பெற சிபிஐ நினைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, சிபிஐ குற்றப்பத்திரிகையை சம்பந்தபட்டவர்களுக்கு வழங்குவதற்கு முன்னதாக, ஊடகங்களுக்கு வழங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியிருந்தார்.

ப.சிதம்பரத்தின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி.ஷைனி, வழக்கு குறித்து அக்டோபர் 8-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.