முக்கிய செய்திகள்

சிபிஎஸ்இ கேள்வித்தாள் ‘லீக்’: ‘‘மாணவர்களின் கனவுகளுடன் விளையாடும் பிரதமர் மோடி’’ : காங்., கடும் சாடல்..


சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 கேள்வித்தாள் வெளியானதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்துடன் பிரதமர் மோடி அரசு விளையாடியுள்ளதாகவும், இந்த அரசு ‘கேள்வித்தாள் ‘லீக்’ அரசு’ எனவும் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

கேள்வித்தாள் வெளியானதாக எழுந்த புகாரையடுத்து, 10ம் வகுப்பில் கணிதத் தேர்வையும், 12-ம் வகுப்பில் பொருளாதாரப் பாடத் தேர்வையும் மீண்டும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

10-ம்வகுப்பு, 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. ஏறக்குறைய 28 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். இதில் 10-ம் வகுப்பு கணிதம்(கோட்-041), பாடத்துக்கான கேள்வித்தாளும், 12-ம் வகுப்பான பொருளியல்(கோட்0390) கேள்வித்தாளும் தேர்வுக்கு முன்னதாக நேற்று இரவு சமூக ஊடகங்களில் வெளியானதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், இதுதொடர்பான செய்திகள் நாளேடுகளிலும், செய்தி சேனல்களிலும் வெளியாகின. இதையடுத்து, 10-ம்வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளியல் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி, 12ம் வகுப்பு பொருளாதார தேர்வு திங்களன்றும், 10ம் வகுப்பு கணித தேர்வு புதனன்றும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை, காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. அஜய் மக்கான் கூறுகையில் ‘‘இந்த தேர்வுக்காக எனது மகன் மிகவும் கஷ்டப்பட்டு தேர்வு எழுதினான். ஆனால் அவனது முயற்சியை மத்திய அரசு வீணாக்கி விட்டது. அவன் மீண்டும் கஷ்டப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது’’ எனக்கூறியுள்ளார்.

இதுபோலவே காங்கிரஸ் மற்றொரு மூத்த தலைவரான ரண்தீப் சுரஜேவாலா கூறுகையில் ‘‘இது கேள்வித்தாளை முன்கூட்டியே வெளியிட்டு மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்கும் அரசு. ‘பேப்பர் லீக் அரசு’ மத்திய அரசு பணியாளர் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகளால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது. பல லட்சக்கணக்கான மாணவர்களின் முயற்சியை சீரழித்து விட்டது. பிரதமர் மோடி அவர்களே. இதன் மூலம் தேர்வுகளை நடத்த தகுதியற்ற அரசாக இது மாறி விட்டது’’ எனக்கூறியுள்ளார்.

இதுபோலவே பல லட்சகணக்கான மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடாதீர்கள் என மத்திய அரசக்கு காங்கிரஸ் எம்.பி சசி தரூரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வரும் காலங்களில் சிபிஎஸ்இ தேர்வுகளில் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாகாமல் தடுக்க எலெட்ரானிக்ஸ் முறையிலான கேள்வித்தாள்களை வடிவமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.