முக்கிய செய்திகள்

சி.பி.எஸ்.இ : 6-ம் வகுப்புத் தேர்வில் சாதி பாகுபாடு, வகுப்புவாதத்தையும் பரப்பும் கேள்விகள் : மு.க.ஸ்டாலின் கண்டனம்

சி.பி.எஸ்.இ., 6 ம் வகுப்பில், சமூக மற்றும் அரசியல் வாழ்வு எனும் புத்தகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் இஸ்லாமியர் சமுதாயத்தை பற்றி இடம் பெற்றுள்ளன.

சமீபத்தில் நடந்த தேர்வில் சரியான விடையை தேர்வு செய் என்ற பகுதியில், இரு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

அதில், ‛‛தலித்துகள் யார்” என்கிற கேள்விக்கு, ‛‛தீண்டத்தகாதவர்” என்ற பதிலும், ‛‛இஸ்லாமியர்களின் வழக்கமான குணம்” என்ன என்பதற்கு, ‛‛பெண் பிள்ளைகளை, பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள்” எனற பதிலும் தரப்பட்டுள்ளது.

இந்த இரு கேள்விகள் மற்றும் பதில்கள், மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. இந்த கேள்வி, பதில்களை உடனடியாக நீக்க வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சாதி பாகுபாட்டையும் வகுப்புவாதத்தையும் பரப்பும் கேள்விகள் கேந்தரிய வித்யாலயா 6ம் வகுப்புத் தேர்வில் இடம்பெற்றிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன்.
இப்படிப்பட்ட கேள்விகளை இடம்பெறச் செய்தவர்கள் விசாரிக்கப்பட்டு உரிய சட்டங்கள் மூலம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.