மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் : நிதியமைச்சகம் வந்தார் அருண் ஜெட்லி..


பலத்த எதிர்பார்ப்புக்கிடையே மத்திய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்யவுள்ளார்.

அடுத்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடை பெற உள்ளதால், வாக்காளர்களைக் கவரும் வகையில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு, அருண் ஜேட்லி தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் இதுவாகும். மேலும் இந்த அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு அளவிலான பட்ஜெட் இதுவாகும். 2019-ம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் நடக்க இருப்பதால், அடுத்தாண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, மத்தியில் ஆளும் அரசு தனது கடைசி முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, அடுத்து வரும் தேர்தலை கருத்தில் கொண்டு மக்களுக்கு அதிகமான சலுகைகளை அறிவிப்பது வழக்கம். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், பட்டியலிடப்பட்ட பிரிவினர், ஏழை மக்கள் ஆகியோரின் வாக்குகளை கவரும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும்.

அதிலும் மாத ஊதியம் பெறும் பிரிவினரை ஈர்க்கும் வகையில் சலுகைகளை ஒவ்வொரு ஆண்டும் அரசு அறிவித்து வருகிறது. கடந்த 2008-09-ம் ஆண்டில் வருமானவரி விலக்கு ரூ.1.5 லட்சமாக இருந்த நிலையில், படிப்படியாக அதி கரிக்கப்பட்டு இப்போது ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா, சேமிப்புகளுக்கு மேலும் ஊக்கம் அளிக்கப்படுமா என்பன உள்ளிட்ட எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

ஜேட்லியின் பாணி

பொதுவாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது ஒவ் வொரு நிதி அமைச்சரும் தனக்கென ஒரு பாணியைக் கையாள்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் அருண் ஜேட்லி நீண்ட நேர பட்ஜெட் தாக்கலுக்கு பெயர் போனவர். ஒவ்வொரு திட்டத்தை அறிவிக்கும் முன்னரும் எதற்காக, ஏன் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது என்று விளக்குவார். 2014-ம் ஆண்டு முதலாவது பட்ஜெட்டை ஜேட்லி தாக்கல் செய்ய இரண்டரை மணி நேரம் எடுத்துக் கொண்டார். இடையே 10 நிமிடம் இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தார்.

விவசாயத்துக்கு முக்கியத்துவம்

தொடர்ச்சியாக வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் துறை, கடந்த சில ஆண்டுகளாக பெரிதாக கவனிக்கப்படவில்லை. இம்முறை விவசாயத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

80சி கழிவு உயர்த்தப்படுமா?

இப்போது வருமான வரி செலுத்துபவர்கள் விலக்கு பெற ரூ.1.5 லட்சம் வரை சேமிப்புகளை கணக்கில் காட்டலாம் என்ற விதிமுறை இருக்கிறது. அதாவது வரி விலக்கு தரும் சேமிப்பு திட்டம், இபிஎப், பிபிஎப், வாழ்நாள் காப்பீடு, தேசிய சேமிப்பு பத்திரம், இஎல்எஸ்எஸ் ஆகியவற்றில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்து 80சி பிரிவின் கீழ் வரிவிலக்கு பெறலாம்.

இந்நிலையில், நாட்டில் பணவீக்கத்தின் அளவு அதிகரிப்பு, 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி ஊதிய அளவு உயர்த்தப்பட்டு இருப்பதால் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் ரூ.50 ஆயிரம் உயர்த்தி ரூ.2 லட்சம் வரை 80சி பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வருமானவரி விலக்கு உயருமா?

மாத ஊதியம் பெறுபவர்களுக்கு வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக இருக்கிறது. அதாவது, ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்குள் வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. ஆனால், சமீபத்தில் 7-வது ஊதியக்குழுவில் ஊதியம் உயர்த்தப்பட்டு இருப்பதால், செலவு செய்யும் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, வருமான வரி விலக்கு அளவு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒருவேளை உயர்த்தப்பட்டால், வரு மான வரி செலுத்தும் சுமார் 75 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.

மீண்டும் நிலையான கழிவு

நிலையான கழிவுத் திட்டம் என்பது கடந்த 1974-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, 2006-ம் ஆண்டு அதை நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நீக்கினார். நிலையான கழிவு திட்டம் ஒட்டுமொத்த வருமானத்தில் குறிப்பிட்ட அளவு நமது உறவினர்களுக்கும், மருத்துவத்துக் கும் செலவு செய்வதற்காக கணக்கு காட்டத் தேவையில்லை என்பதாகும்.

வீட்டுக்கடன்

வீட்டுக் கடன் வட்டியில் ரூ.2 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படுகிறது. இதை ரூ.3.5 லட்சம் வரை உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.