கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிட்ட இழப்புகளை மதிப்பிட மத்தியக் குழு வருகை தந்துள்ளது.
கஜா புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில் சென்று சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரண நிதியாக தமிழகத்திற்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்தியக் குழுவினர் சென்னை வந்தடைந்தனர். அந்தக் குழுவில் நிதித்துறை ஆலோசகர் ஆர்.பி.கவுல், வேளாண் துறை இயக்குனர் ஸ்ரீவத்சவா, ஊரக வளர்ச்சித்துறை துணை செயலாளர் மாணிக் சந்திர பண்டிட், மின்துறை தலைமைப் பொறியாளர் வந்தனா சிங்கால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் இந்தக் குழுவுடன் சென்னையில் உள்ள நீர்வளத்துறை அதிகாரி ஹர்ஷா, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியியல் மேற்பார்வையாளர் இளவரசன் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கும் மத்தியக்குழுவினர் நாளை காலை முதலமைச்சர், தலைமைச்செயலாளர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகின்றனர். விமானம் மூலம் திருச்சி செல்லும் மத்தியக் குழுவினர் முதற்கட்டமாக புதுக்கோட்டையில் ஆய்வு மேற்கொள்கின்றனர். புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மத்தியக் குழுவினர் மூன்று நாட்கள் ஆய்வு செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களை மத்தியக்குழு பார்வையிட்டது. அதனால் பெரிய அளவில் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. மாநில அரசு கேட்ட நிவாரணத் தொகையையும் மத்திய அரசு முழுமையாக அளிக்கவில்லை. இந்நிலையில், இந்த முறையும் மத்தியக்குழு வந்துள்ளது. இதனால் ஏதாவது பயன் கிடைக்குமா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.