சந்திரயான் 2 : தரையிறங்கும் கலன் சுற்றுவட்டக் கலனிலிருந்து வெற்றிகரமாக பிரிந்தது

சந்திரயான் விண்கலத்தின், தரையிறங்கும் கலன் சுற்றுவட்டக் கலனிலிருந்து வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சுற்றுவட்டக்கலன் தொடர்ந்து தனது சுற்றுவட்டப்பாதையில் நிலவை சுற்றும்.’ என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சுற்றுவட்டக் கலனில் இருந்து பிரிந்த தரையிறங்கும் கலன் நிலவில் செப்டம்பர் 7-ம் தேதி தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிலவை நோக்கிய பயணம் என்கிற லட்சிய திட்டத்தின் ஒரு பகுதியான சந்திரயான்-2 விண்கலனை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ)

இந்த ஆண்டு ஜூலை 15ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு விண்ணில் ஏவுவதாக முதலில் திட்டமிடப்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து ஜூலை 22-ம் தேதி ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து ஏவப்பட்டது.

சந்திரயான்-2இல் மூன்று முக்கிய கலன்கள் உள்ளன. முதலாவதாக, சுற்றுவட்டக்கலன் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும்.

இரண்டாவதாக, நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் கலன். மூன்றாவதாக, இந்த தரையிறங்கிய கலனில் இருந்து ரோவர் ஊர்தி வெளியேறும்.

இந்த ரோவர் ஊர்தி நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று தகவல்களை தரையிறங்கு கலனுக்கு அனுப்பும்.

இந்த தரையிறங்கு கலன் இந்த தகவல்களை நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்துகொண்டிருக்கும் கலனுக்கு அனுப்பும். இந்த சுற்றுவட்டக் கலன் பூமிக்கு தகவல்களை அனுப்பி வைக்கும்.