முக்கிய செய்திகள்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2 விண்கலத்துடன் ஜிஎஸ்எல்வி மார்க் 3..

சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமான விண்ணில் பாய்ந்தது. மேலும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் விண்கலத்தை வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தியது.

நிலாவில் இறங்கி ஆய்வு நடத்தும் சந்திரயான்-2 விண்கலத்தின் கிரையோஜெனிக் எந்திரத்தின் ஹீலியம் வாயு குழாயின் வால்வில், ஏற்பட்ட கசிவு சரி செய்யப்பட்டு, மீண்டும் ஏவுவதற்கான கவுண்டவுன் நேற்று மாலை தொடங்கியது.

திட்டமிட்டபடி இன்று மதியம் 2.43 மணிக்கு சந்திரயான் 2 ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டின் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு 16 ஆவது நிமிடத்தில் புவி வட்டப் பாதையை அடைந்தது…

சந்திரயான் 2 புவி வட்டப்பாதையை அடைந்த பின்னர் உரையாற்றிய இஸ்ரோ தலைவர் சிவன், இஸ்ரோவின் வரலாற்றில் இந்த திட்டம் புதிய மைல் கல் எனத் தெரிவித்தார்.

விஞ்ஞானிகளின் ஒருங்கிணைந்த பணியால் இந்த சாதனை சாத்தியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 15 ஆம் தேதி ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய அமைக்கப்பட்ட குழு 7 நாட்களாக உறங்காமல் பணியாற்றியதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் குறிப்பிட்டார்.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வூர்தியை இறக்குவதுதான் அடுத்த இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து 47 நாட்கள் பயணிக்கும் சந்திரயான் -2 விண்கலம், நிலாவை சென்றடைந்த பின்னர், அதிலிருந்து நிலாவில் தரையிறக்கும் விக்ரம் விண்கலம் பிரியும். விக்ரம் விண்கலம் நிலாவில் தரையிறங்கிய நான்கு மணி நேரத்திற்கு பின்னர்,

அதிலிருந்து நிலாவில் ஊர்ந்து சென்று ஆராயும் பிரக்யான் விண்கலம், நிலாவில் இறங்கி ஆராயும் பணியை தொடங்கும். விக்ரம், பிரக்யான் விண்கலங்கள் 14 நாட்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டு தகவல்களை இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். இதே நேரத்தில் சந்திரயான் -2 விண்கலம் ஓராண்டு காலம் நிலாவை சுற்றி, சுற்றி வந்து ஆய்வில் ஈடுபடும்.

இந்த ஆய்வின் மூலம் நிலாவின் தென்துருவத்தில் தண்ணீர் உள்ளதா,வேறு என்னென்ன தனிமங்கள் உள்ளன,

நிலாவின் தட்பவெப்பம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் திரட்டப்பட உள்ளன. நிலாவில் விக்ரம், பிரக்யான் கலங்கள் திட்டமிட்டபடி தரையிறங்கினால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு பின்னர் இது போன்ற ஆய்வில் ஈடுபட்ட நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.