முக்கிய செய்திகள்

70 ஆண்டுகால இருட்டில் இருந்து விடுதலையான கிராமம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மலை கிராமம் ஒன்றிற்கு இப்போதுதான் முதல் முறையாக மின்னிணைப்பு வழங்கி உள்ளனர்

நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் கடந்த பின்னரும் இருளில் மூழ்கிக் கிடந்த அந்த மலைக் கிராமம், முதல் முறையாக ஞாயிற்றுக் கிழமைதான் மின்னொளி வெளிச்சத்தைப் பார்த்திருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில், சுற்றிலும் மலைகளும், வனமும் சூழ அமைந்துள்ளது ஜோகாபாத் கிராமம்… இந்த கிராம மக்கள் இதுவரை மின்னொளி விளக்கைப் பார்த்ததே இல்லை. நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கும் பிரதமரின் சவுபாக்யா மின்னொளித் திட்டத்தின் கீழ், இருண்டு கிடந்த ஜோகாபாத் கிராமத்திற்கு, முதல் முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், மின்சார வசதி இல்லாததால், குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வளர்ச்சியும் இத்தனை ஆண்டுகளாக முடங்கிக் கிடந்ததாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். முதல் முதலாக மின்னொளியைக் கண்ட மகிழ்ச்சி அவர்களது முகத்திலும் மின்னுகிறது. இதுவரை இருளில் தவித்த சிறுவர்களும், பெண்களும், புதிதாக பாயும் ஒளி வெள்ளத்தில் நீந்தித் திளைப்பதைக் காணமுடிகிறது. சில நிமிடங்கள் செல்போன் முடங்கினாலே மூச்சு முட்டும் நமக்கு, மின்சாரம், மின்விசிறி, தொலைக்காட்சி என எதுவுமே இல்லாத கிராமத்தின் வாழ்க்கையும், கதையும் அதிர்ச்சி அளிப்பதில் வியப்பில்லை.

Chttisgarh village gets electricity for the first time