சத்தீஸ்கரில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல்: 70% வாக்குகள் பதிவு

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்டமாக  18  தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவில் 70% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. நக்சலைட்களின் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளில் நவம்பர் 12-ம் தேதியும், மீதமுள்ள 72 தொகுதிகளில் நவம்பர் 20-ம் தேதியும் வாக்குப்பதிவு நடத்த தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் 18 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு சத்தீஸ்கரில் திங்கள் கிழமை பலத்த பாதுகாப்புடன் நடந்து முடிந்தது.

மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் உள்ள 10 தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மீதமுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பஸ்தார், பிஜப்பூர், தண்டேலாடா உள்பட நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவுக்காக துணை ராணுவத்தினர், போலீசார் என சுமார் ஒரு லட்சம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பலத்த பாதுகாப்புக்கு இடையே காலை முதல் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அஜித்ஜோகி கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மொத்தம் 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.