நம்மாழ்வார் கண்ட கனவு இதுவா? : செம்பரிதி

இன்று நம்மாழ்வார் பிறந்த நாள் (ஏப்ரல் 6, 1938 – டிச30, 2013) 

 

Chemparithi recalls Nammazhwar’s green dreams

______________________________________________________________________________

 

ஜப்பானின் இயற்கை வேளாண் விஞ்ஞானி மாசானபு ஃபுகாகோவின் இயற்கை வேளாண்மைக்கான போராட்ட வாழ்வை வியந்து போற்றி வந்த நமக்கு, அருகிலேயே அந்த வேள்வியை நடத்தி வந்த நம்மாழ்வாரை அடையாளம் காண்பதற்கு பல ஆண்டுகள் ஆயின. நம்மாழ்வாரின் முதுமைக் காலத்தில்தான், இயற்கை வேளாண்மைக்காக அவர் முன்னெடுத்து வந்த போராட்டங்கள் குறித்த முக்கியத்துவத்தை தமிழ்ச் சமூகத்தின் ஒரு பகுதி புரிந்து கொண்டது. இன்னும் மீதமிருக்கும் பெருந்திரளுக்கு  அவர் சொன்ன செய்தி சென்று சேரவே இல்லை என்பதுதான் உண்மை.nammazh 4

 

விவசாயிகளின் போராட்டம் பேருருவெடுத்திருக்கும் தற்போதைய தருணத்தில், அந்தத் தொழில் இந்த அளவுக்கு நலிவடைவதற்கான அடிப்படைக் காரணிகளை நாம் கண்டறிந்து உணர வேண்டியது அவசியம். கடன் தள்ளுபடிக்காக கண்டும் காணாமல் போகும் அதிகாரக் கயவர்களிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட விவசாயப் பெருமக்கள், தங்களது இந்த இழி நிலைக்கான காரணங்கள் குறித்து அழுத்தமாக சிந்திக்கவும் வேண்டும். அந்தச் சிந்தனையை நம்மாழ்வாரிடமிருந்து மட்டுமே பெற முடியும்.

 

1960 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் உள்ள வேளாண் ஆய்வு மையத்தில் பணியாற்றிய நம்மாழ்வார், விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்காக வேதி உரங்களையும், பூச்சி மருந்துகளையும் பயன்படுத்தும் நவீன வேளாண் முறை கண்டு மனம் நொந்தார். ‘பசுமைப் புரட்சி’ என்ற முழக்கத்தை ஆளும் அரசு இயந்திரமே உரக்க ஒலித்த காலம் அது. ஆனால், அந்தத் தொழில் நுட்பத்தால், மண்ணின் இயற்கையான வளம் உறிஞ்சப்பட்டு விரைவிலேயே இது களர்நிலமாகும் என அப்போது எச்சரித்திருக்கிறார் நம்மாழ்வார். விளைவு அவர் பார்த்து வந்த அரசு வேலையை உதற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இறுதி மூச்சுவரை இயற்கையைக் காப்பதற்காகவே பாடிப் பறந்த நம்மாழ்வார் என்ற அந்த பசும்பறவை, அரசின் கூண்டிலிருந்து விடுபட்டு அப்போது வெளியே வந்து சுதந்திரமாக பறந்தது.

 

nammazh 5தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களிடம் சென்று, அவர்கள் அப்போதும் கடைப்பிடித்து வந்த வேளாண் முறைகளை நேரடி செயல்முறையாகவே கண்டும், உய்த்தும், உணர்ந்தும் தமது சிந்தனையை வலுப்படுத்திக் கொண்டார். அப்போதெல்லாம், நம்மாழ்வாரை நக்சலைட் என்று கூறி காவல்துறையினர் கைது செய்து சித்ரவதை செய்த சம்பவங்களும் உண்டு. அவரது மெலிந்த உடலும், நீண்ட தாடியும், அழுக்கடைந்த ஆடையும் காவல்துறையின் கண்ணுக்கு அவரை நக்சல் தீவிரவாதியாக காட்டியுள்ளன. அதுபோன்ற சமயங்களில் நீங்கள் யார் என காவல்துறையினர் கேட்டால், அப்பகுதியிலேயே வசிக்கும் மிகவும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகுப்பின் பெயரைச் சொல்வதை, நம்மாழ்வார் ஒரு நடைமுறையாகவே வைத்திருந்திருக்கிறார். ஆம். அவர் வெறும் வேளாண் விஞ்ஞானி மட்டுமல்ல. விளிம்புநிலை மனிதர்களின் குரலாகவும், அவர்களது வாழ்வாதாரம் பறிபோவது பற்றிய அக்கறை கொண்ட சமூகப் போராளியாகவும் மிளிர்ந்திருக்கிறார்.

 

இந்தக் காலக்கட்டத்தில், சீன இயற்கை வேளாண் விஞ்ஞானி ஃபுகாகோவின் ‘ஒன்றுமே செய்யாமல், இயற்கையை அதன் போக்கிற்கு அனுமதித்தல்’ என்ற வேளாண் அறிவியல் சிந்தனையின் மீது நம்மாழ்வாருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. அதன் பிறகு இயற்கை வேளாண்மையை நோக்கி அவர் மேற்கொண்ட பயணம் வானகரம் வரை நீண்டது.

 

உணவு உற்பத்தி என்பது இயற்கை தரும் கொடைகளையே மீளுருவாக்கம் செய்யும் அறிவியலாக இருக்க வேண்டும் என்பதே நம்மாழ்வாரின் அழுத்தமான சிந்தனை.

 

அவர் எழுதுவதையும், பேசுவதையும் விட, எளிய மக்களுடன் இணைந்து களப்பணி ஆற்றுவதன் மூலமாகவே இயற்கை வேளாண்மை பற்றிய கருத்துப் பரவலை, கற்கவும்,கற்பிக்கவும் விரும்பினார். வேளாண்மை என்பது வணிகமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என்பதை ஓயாமல் உரத்துக் கூறி வந்தார்.

nammazh 6

இப்போது, விவசாயிகள் பிரச்னை முட்டுச் சந்தில் வந்து நிற்கிறது. பிரச்னை தீர்வதற்கு முதலில் நேர்மையாக கையாளும் சூழல் இருக்க வேண்டும். நமது அரசியல் வாதிகளுக்கும் நேர்மைக்கும் யாதொரு தொடர்புமில்லை. பின் எப்படி அவர்கள் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பார்கள். ஆனாலும் அவர்கள்தான் கண்டாக வேண்டும். காரணம், நல்ல நிலத்தை களர் நிலமாக்கிய திட்டங்கள் அனைத்தும் அவர்களால் தீட்டப்பட்டதுதானே!

 

எம்.எஸ்.சுவாமிநாதனைப் போன்றோர், உற்பத்தியைப் பெருக்குவதாகக் கூறி, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்த மண் சேமித்து வைத்திருந்த மணிச் சத்தை 50 ஆண்டுகளுக்குள்ளேயே உறிஞ்சி எடுத்து, நிலத்தை ஒன்றுக்கும் உதவாத உவர் நிலமாக்கிவிட்டார்கள். அப்படியென்றால், பசுமைப் புரட்சி என்ற புரட்டு முழக்கத்தின் மூலம், எத்தனை பெரிய பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். நம்மைப் பிடித்த கேடு, இதுவரை இப்படி ஒரு கவலையோ, சிந்தனையோ எந்தத் தலைவருக்கும் வராமல் போய் விட்டது. சூழல் குறித்த பார்வையோ, இயற்கை குறித்த அக்கறையோ, அறிவோ அவர்களுக்கு இல்லை. இருப்பவர்கள் அவர்களிடம் சொல்ல முடியாது. சூழல் குறித்த அக்கறை இருந்தால், இயற்கை குறித்த அறிவிருந்தால், ஆற்று மணலை இப்படிக் கூறு போட்டுக் கொள்ளையடிப்பார்களா? கைப்பிடி மணல் உருவாவதற்கு எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் தெரியுமா… விலை மதிப்பற்ற மணல் எனும் மண்ணின் உயிரை, எந்தத் தயக்கமும் இன்றி கொள்ளையடித்து செல்வத்தைக் குவித்த தன்னுணர்வற்ற பன்றிகளின் முன்பாக, இயற்கை வேளாண்மை பற்றிய சிந்தனை என்ற மாணிக்கப் பரல்களைத் தூவி என்ன பயன்? ஆனாலும் தூவினார் நம்மாழ்வார்.

 

தமிழ் மானுடத்தைக் கூவிக்கூவி அழைத்தார்.

 

நமது மரபார்ந்த தானியங்களும், விதைகளும், இயற்கை உரங்களும் எங்கே என்று தேடுங்கள். அது ஒன்றுதான் நமது சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லும் பெரும் சொத்தாக இருக்க முடியும் என்று கூக்குரலிட்டார்.

nammazhwar final

சிலர் செவிகளில் அது விழுந்து திரும்பிப் பார்த்தனர். ஆங்காங்கே, இயற்கை வழி வேளாண்மை பற்றிய விழிப்புணர்வும், செயல்பாடும் தென்படத் தொடங்கியது.

 

இப்போது அவை பண்ணைகளாகக் கூட வளர்ந்துள்ளன. ஆனால், சாதாரண விவசாயிகளை நம்மாழ்வாரின் இந்தக் கருத்து முழுமையாக சென்றடைந்து விடவில்லை. இயற்கை வேளாண் பண்ணைகளில் இருந்து விளைவிக்கப்படும் பொருட்கள் பெருநகரங்களில் ஆர்கானிக் உணவுகளாக, பெரும் விலைக்கு விற்கப்படுகின்றன. நிச்சயமாக நம்மாழ்வார் எதிர்பார்த்தது இதனை அல்ல. அவர் என்ன பாபா ராம்தேவா… பதஞ்சலி போன்ற கார்ப்பரேட் நிறுவனத்தைக் கட்டமைத்து பில்லியன் டாலர் கணக்கில் எளிய மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்க…

 

அழுக்கு வேட்டியும், அலையும் தோற்றமுமாக புழுதிகளிலும், காடுகளிலும் நடந்து சென்று கிராமம், கிராமமாக மக்களைச் சந்தித்தவர் நம்மாழ்வார். அவர்களுக்காக போராடியவர். அவரது மரணமும் கூட போராட்டக்களத்தில்தான் நிகழ்ந்தது. அப்படிப் பட்ட அப்பழுக்கற்ற பெருந்தொண்டரின் கனவு, பெருநிறுவனங்கள் மூலம் இயற்கை உணவை விற்பனை செய்து கொள்ளை லாபம் கொழிக்க வேண்டும் என்பதாக நிச்சயம் இருக்காது. இயற்கை வேளாண்மை என்பது எளிய மக்களின் வாழ்க்கை முறை ஆக வேண்டும் என்பதே நம்மாழ்வாரின் கனவு. ஏதோ சில பணக்காரர்கள் ஆர்கானிக் உணவை பெரும் விலை கொடுத்து வாங்க வேண்டும் என்பதல்ல அவரது கனவு. ஆனால், நமது சமூகத்தில் வழக்கமாக விழுமியங்களுக்கு நேரும் அவலம், நம்மாழ்வாரின் கோட்பாட்டுக்கும் நேர்ந்திருக்கிறது. ஐடி படித்தவர்கள் எல்லாம் இயற்கை விவசாயத்திற்கு வருவதாகக் கூறிக் கொண்டு, அதனை ஒரு கார்ப்பரேட் வணிகமாக மாற்றும் விபரீத முயற்சியில் இறங்கி உள்ளனர். இது பசுமைப் புரட்சியைவிட பயங்கரமான பேராபத்து.

 

இயற்கை வேளாண்மை என்பது எளிய மக்களின் இயல்பான வாழ்க்கை முறையாக மாற வேண்டும். இயற்கை வேளாண் ஆர்வலர்கள், அந்த இலக்கை நோக்கி தங்களது பயணத்தை நடத்த வேண்டும். அதுதான் நம்மாழ்வார் என்ற அந்த நல்லவர் கண்ட கனவு. கார்ப்பரேட் வர்த்தக வெறியின் மூலம், அவர் கண்ட பசுமைக் கனவைச் சிதைத்து விட வேண்டாம்.