Chemparithi’s Arasiyal Pesuvom – 16
____________________________________________________________________________________
அரசியல் பேசுவோம் என்ற இத்தொடரை சிறிய இடைவெளிக்குப் பிறகு தொடர்கிறேன். பழைய வரலாறுகளைப் பேசுவது முக்கியமானதுதான் எனினும், சமகால நிகழ்வுகளின் மீதான அவதானிப்பு அதிகரிக்கவே, அவை தரும் அதிர்வும், மனக்கிளர்ச்சியும் பல நேரங்களில் நம்மை அமைதியாக்கி விடுகின்றன. அத்தகைய கொந்தளிப்பால் நிலவிய அமைதியே இந்த இடைவெளிக்குக் காரணம். கொந்தளிக்கும் உணர்வுகளின் உரத்த மொழி என்பது மௌனமாகத்தானே இருக்கிறது. எனினும் பேசப்பட வேண்டிய, பேசப்படாதவற்றை பேசுவது அவசியமான ஒன்றுதானே! எனவே தொடர்ந்து பேசலாமென முடிவு செய்தேன். பேசுவோம்…
………
சில நாட்களாக வடமாநில ஊடகங்களில் ஒரு பெயர் அடிபடுவதைக் கவனித்திருப்பீர்கள். பிரசாந்த் கிஷோர்.
யார் இந்த பிரசாந்த் கிஷோர்?
2014ம் ஆண்டு மோடியின் தேர்தல் பரப்புரைக்கான வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் போது நிதிஷ்குமாருக்கும் இவர்தான் வெற்றிக்கான தந்திரோபாயங்களை வகுத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த மனிதர் உத்தரப்பிரதேசத்தில் முகாமிட்டிருக்கிறாராம். பீகாரின் வளர்ச்சிக்காக திட்டம் வகுத்துத் தருவதாகக் கூறி, நிதீஷிடம் 9கோடி ரூபாயை வாங்கிய பிரசாந்த் கிஷோர், இப்போது உத்தரப்பிரதேசத்துக்கு சென்றுவிட்டதாக அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்த முறை பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுப்பது காங்கிரசின் வெற்றிக்காக! இது எப்படி இருக்கிறது? மோடியைப் பார்த்து நிதீஷ், நிதீஷைப் பார்த்து ராகுல் என அனைவரும் பிரசாந்த் கிஷோர் எனும் “பிசார வியாபாரி”யிடம் கைகட்டி நிற்கிறார்கள்.
நம் ஊர் திமுகவினருக்கு இப்படி ஒருவர் இருப்பது தெரியாமல் போய்விட்டதோ என்னவோ… தெரிந்திருந்தால் கடந்த தேர்தலில் அவர்கள் மேற்கொண்ட கார்ப்பரேட் பிரசார வியூகத்தை, அதைச் செய்யத் தெரிந்த உருப்படியான ஒருவரிடமாவது ஒப்படைத்திருப்பார்கள். திமுகவும் ஆட்சியைப் பிடித்திருக்கும். இப்படித் திக்குத் தெரியாத முக்கில் போய் திமுக நின்றிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
சரி.. இந்தக் கதையெல்லாம் இப்போது எதற்கு என கேட்கிறீர்களா? வேறு எப்போதுதான் நாம் சிந்தித்துவிடப் போகிறோம். நமது பிரச்னை, பிசாந்த் கிஷோரோ, அவர் வகுத்துக் கொடுக்கும் தேர்தல் வியூகங்களோ அல்ல. ஜனநாயகம், ஜனநாயகம் என்று முழங்கிக் கொண்டே, தேர்தல் நேரத்தில் நமது பொன்னான வாக்குகளைக் கேட்டு வரும் இந்த அரசியல் கட்சிகளின் பொல்லாத போலித்தனம்தான்.
போதாக்குறைக்கு, இப்போது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ‘சோசியல் மீடியா’ பைத்தியம் வேறு பிடித்து ஆட்டுகிறது. ட்விட்டரில், ஃபேஸ்புக்கில் இத்தனை லட்சம் பேர், இத்தனை ஆயிரம் பேர் என்னை பின் தொடர்கிறார்கள் என்ற பிரலாபிப்பு வேறு!
தன் அழகை எத்தனை பேர் திரும்பிப் பார்க்கிறார்கள் என்ற ஆர்வக்கோளாறு மிக்க இளம் வயதுப் பெண்களின் பருவக் கிளர்ச்சி சார்ந்த அறிவிலித் தனமான பகட்டுக்கும், அரசியல்வாதிகளின் இத்தகைய அறிவீன ஆர்வத்துக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
காந்தியும், நேருவும், பெரியாரும், காமராஜரும், அண்ணாவும் ஃபேஸ்புக் மூலமாகவா கட்சிக்கு ஆள்பிடித்தார்கள். அட அசடர்களே!
அது அந்தக் காலம் என்பது வறட்டு வாதம். பெரியார் அன்று பேசியதை சிந்திக்கவும் திராணியற்ற பெரும்பான்மையினர்தான் இன்றைய இளையதலைமுறையினர். ஒரு சமூகத்தின் நவீனம் என்பது செல்போனில் ஏற்படும் புரட்சி அல்ல. சிந்தனையில் ஏற்பட வேண்டிய மாற்றம்.
ஆப்பிள், ஆன்ட்ராய்டு என ஸ்மார்ட் போன்களை கையாளத் தெரிந்த லாவகத்தில் மட்டுமே ஒரு சமூகத்தின் நவீனத் தன்மையை கட்டமைத்துவிட முடியாது. இவை வெறும் தகவல் பரிமாற்றம் சார்ந்த வளர்ச்சி மட்டுமே. இவற்றில் நீங்கள் பரிமாறிக் கொள்வதும் கூட பெரும்பாலும் பழைய தகவல்களை மட்டுமே. விக்கி மீடியா இல்லாவிட்டால் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற சினிமா பிம்பங்கள் பற்றிய தகவல்கள் கூட இன்றைய தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பில்லை. வாசிப்பதையும், சிந்திப்பதையும் அத்தனை கவனமாக இந்தத் தலைமுறையிடமிருந்து துடைத்தெறிந்து விட்டு, அவர்களை முற்றிலும் எலக்ட்ரானிக் பொருட்களைச் சார்ந்து வாழ மட்டுமே தெரிந்த ஜீவராசிகளாக (ஏறத்தாழ ரோபோக்களாக) மாற்றி இருக்கிறது, வல்லாதிக்க சக்திகள் வகுத்திருக்கும், மும்மய (உலகமயம், தாராளமயம், தனியார் மயம்) பண்பாட்டுப் பாதை!
இவற்றை எதிர்த்து நிற்க வேண்டிய அரசியல் இயக்கங்களோ, ஃபேஸ்புக், ட்விட்டர் என தகவல் பரிமாற்றத் தளங்களில் தஞ்சமடைகின்றன. ஜனநாயகத்தின் விபரீதமான தலைகீழ் பரிணாமம் என்றுதான் இந்தப் போக்கைக் கருத வேண்டி இருக்கிறது. விஞ்ஞானத்தின் நிலையும் ஏறத்தாழ அதுவாகத்தான் விடிந்திருக்கிறது. அணு ஆயுதத் தயாரிப்புகளின் மூலம், வல்லரசுகளை உருவாக்கும் ‘பெரும் பணியில்’ தானே இன்றைய விஞ்ஞானிகளில் பெரும்பான்மையினர் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். மனித இனத்துக்குத் தேவைப்படும் ஆக்கரீதியான புதிய கண்டுபிடிப்புகளுக்கான தேடல் அருகிவிட்டது என்பதுதானே இன்றைய விஞ்ஞான உலகம் சொல்லும் உண்மையும் கூட! சார்லஸ் டார்வின் என்ற அறிவியலாளரின் உயிர்ப்பரிணாம் பற்றிய கோட்பாடு, மனித இனத்தை சிந்திக்க தூண்டியது என்றால், இன்றைய அறிவியல் முன்னேற்றமோ செல்போன்களின் தொடுதிரைகளில் லட்சுமி, சரஸ்வதி, வினாயகர் போன்ற சாமி படங்களை பதிவேற்றம் செய்து பார்த்து மகிழக் கற்றுக் கொடுக்கிறது. சில ‘நவீனர்கள்’ தங்களது காதலி, மனைவி குழந்தைகள் படங்களை வைத்துக் கொள்கிறார்கள்.
அது ஒரு புறம் இருக்கட்டும். அரசியலுக்கு வருவோம்.
இந்துத்துவாவை நோக்கி நாட்டை திசை திருப்ப முயலும் மோடியர்களின் பரிவாரமும், அவர்களை எதிர்த்து நிற்பதாக கூறும் நிதிஷ் போன்றவர்களின் அணியும் வெற்றி பெறுவதற்கு தேர்ந்தெடுத்த வியூகம் என்னவோ, கார்ப்பரேட் வர்த்தக் சூதுதான்!
மக்களைத் திரட்டுவதற்கு புதுமையான கருத்துகளும், தீவிரமான இயக்கமும் தேவைப்பட்ட காலம் போய், கையில் ஒரு ஸ்மார்ட் போனும், ஃபேஸ்புக், ட்விட்டர் இணைப்புகளும் மட்டும் இருந்தாலே ஒரு கட்சிக்குப் போதுமானது என்னுமளவுக்கு மனித இனம் ‘முன்னேறி’ இருக்கிறது!
இந்தியாவில் மட்டுமல்ல. வளர்ந்த நாடுகள் என நாம் வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா போன்ற அரைவேக்காட்டு சமூகங்களும் கூட இத்தகைய பரிணாமத்தின் உச்சநிலையை எட்டி இருக்கின்றன.
அங்கு அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரியும், ட்ரம்பும் போட்டுக்கொள்ளும் நாலாந்தரமான
பரப்புரைச் சண்டையே, அந்தப் பரிணாமத்துக்கு சிறந்த உதாரணம். உலகநாடுகளை வேவுபார்த்து ஒழித்துக் கட்டுவதிலும், மனிதர்களைச் சித்ரவதை செய்வதிலும் சிறந்த அமைப்பாக கருதப்படும் சிஐஏ அதிகாரிகளுக்குப் பிடித்தவர் ஹிலாரி என்றால், இஸ்லாமிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடைவிதிக்க வேண்டும் என்பதைப் போன்ற “ஆகச்சிறந்த” மனிதநேயக் கொள்கைகளைக் கொண்டவர் ட்ரம்ப். இருவருமே அங்கு வாழும் சராசரியான எதிர்பார்ப்புகளைக் கொண்ட மக்களுக்கு எதிரானவர்கள் என்பதே உண்மை. ஆனாலும் இவர்கள் இருவரில் யாரோ ஒருவரை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தலையெழுத்தைத் தவிர, அமெரிக்கர்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், இதைப்பற்றி எல்லாம் கவலைப்படவோ, சிந்திக்கவோ அமெரிக்கர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஹிலாரியின் ஓயாத சிரிப்பும், ட்ரம்ப்பின் இடைவிடாத கூச்சலும் அமெரிக்க மூளையை முழுமையாக வியாபித்து மூழ்கடித்திருக்கின்றன. ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என அறிவியக்கத்தின் அத்தனை அங்கங்களும் இருவரையும் முன்னிறுத்தி பேயாட்டம் போடுவதையே முழுநேரத் தொழிலாக வரித்துக் கொண்டுள்ளன.
தத்துவார்த்த பலமனைத்தையும் தொலைத்துவிட்டு, நுகர்வு போதம் தலைக்கேறிய தறி கெட்ட சமூகத்தின் அரசியல் எப்படி இருக்கும் என்பதற்கு அமெரிக்காதான் உதாரணம்! நீங்கள் நினைப்பது சரிதான். நம்மூர் டாஸ்மாக்கில் முன்னிரவு நேரங்களில் கேட்கும் கூச்சலுக்கும், அமெரிக்க தேர்தல் பிரசாரத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லை. என்ன ஒன்று… இங்கு “…த்தா” என்பதற்கு பதிலாக அங்கு “ஷிட்” என்பதைப் போல சில சொற்களைப் பயன்படுத்துவார்கள்.
உண்மையிலேயே, இந்திய உளவியல் என்பது அந்த அளவுக்கு சிதைந்து விடவில்லை என்பதுதான் சற்றே ஆறுதலளிக்கக் கூடிய உண்மை. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றை எல்லாம் தாண்டி முகநூல் கொள்ளையர்களும், ட்விட்டர் திருடர்களும், இந்திய, தமிழ்ச் சமூகத்தின் மூளையில் எஞ்சி இருக்கும் கருத்து சார்ந்த லேசான உயிர்த்துடிப்பை முற்றிலும் மூச்சடக்கிக் கொன்றுவிடத் துடிக்கிறார்கள் என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய அபாயம்.
தீவிர அரசியல் பேசும் இளையதலைமுறையினர் சிலரிடம் காத்திரமான, ஆக்க ரீதியான கருத்துகள் இருப்பதைக் காண முடிகிறது. ஆனால் வெகுசன நீரோட்டத்தின் மையத்தில் ஊடுருவிச் செயல்படும் சில நவீன அரசியல் புரோக்கர்கள், அவர்களைப் போன்ற மிகச் சிலரிடம் எஞ்சி இருக்கும் அரசியல் ஆண்மையையும் “காயடித்து” விடும் மூர்க்கத்துடன் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய நவீன அரசியல் புரோக்கர்களிடம், ஆரோக்கியமான அரசியல் சிந்தனை உள்ள இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மக்களை உன்னதமான கருத்துகளால் ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கையை சக இளைஞர்கள் மத்தியில் பரவலாக்க வேண்டும். எளிய மக்களின் உணர்வுகளுக்கும், மின்னணு அரசியலுக்கும் எப்போதுமே தொடர்பு இருக்கப் போவதில்லை என்ற யதார்த்தத்தை அவர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். ஜனநாயகம் என்பது ஜனங்களின் உணர்வை உந்து சக்தியாகவும், உயிராகவும் கொண்டிருக்க வேண்டுமே அல்லாமல், எலக்ட்ரானிக் சாதனங்களையும், அவற்றில் புழங்கும் அரைவேக்காடுகள் மலிந்த சமூகவலைத்தளங்களையும் அல்ல!
_______________________________________________________________________________________