Chemparithi’s article about TN politics
____________________________________________________________________________
1988 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அதே கட்சியில் அதே காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
1972ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர், கருணாநிதி என்ற தனிமனிதருக்கு எதிராக, அவரை வசைபாடி இசை பெறுவதற்காகவே தொடங்கப்பட்ட கட்சி.
அன்றைய மத்திய அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி, பின்னர் அதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக பெயர் மாற்றம் செய்தார் எம்.ஜி.ஆர்.
ஆக, அஇஅதிமுக என்பது கொள்கை முரணால் பிறந்த கூரிய கருத்தியலை அடிப்படையாக கொண்ட இயக்கமல்ல. தனிமனித காழ்ப்பால் மட்டுமே பிறந்த வாக்குவேட்டைக் கட்சி அது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, கருணாநிதி எதிர்ப்பாளர்களுக்கு வாளாகவும், கேடயமாகவும் பயன்பட்டு வரும் மலிவுவிலை அரசியல் ஆயுதம் என்பதே, அதிமுகவின் உண்மையான அடையாளம். அன்றைய இடதுசாரிகள், அதற்குப் பின்னால் வந்த வைகோ, அதற்குப் பின்னர் பழ.நெடுமாறன், தற்போது சீமான், வேல்முருகன் போன்றோர் என அதிமுக ஆதரவாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதன் அடிப்படையும் அதுதான்.
1987ஆம் ஆண்டு எம்ஜிஆர் மரணத்திற்குப் பின்னர், அதிமுகவின் அகமும், புறமும் ஜெயலலிதாவாக மாறியது. எனினும் ‘கருணாநிதி என்ற தீய சக்தியை’ ஒழிக்க வேண்டும் என்ற எம்ஜிஆரின் முழக்கத்தை மிகக் கவனமாகவே தொடர்ந்து வந்தார் ஜெயலலிதா. ஆனால், ஜெயலலிதாவோ சசிகலா கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தார். ஜெயலலிதாவை கட்சிக்காரர்கள் மட்டுமின்றி, ரத்தபந்தங்களும் கூட நெருங்க முடியாத இரும்புத்திரையை சசிகலா எழுப்பி வைத்திருந்தார். ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவு தொடங்கி மரணம் வரை, அந்த இரும்புத்திரை உலகிற்குள் எவரும் அறியாத மர்ம நிகழ்வுகளாகவே நடந்து முடிந்து விட்டன. ஜெயலலிதா தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டதன் விளைவு என்றும் அதனைக் கூறலாம்.
தங்களது பிழைப்பு நடைபெற, தமிழகத்தில் பிம்ப அரசியல் கலைந்து விடாமல் இருக்க வேண்டும் என்ற சுயநல சுரண்டல் கும்பலின் ஆசைதான் அதிமுகவின் பலம். எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பிம்ப அரசியலை விடாப்பிடியாக கட்டி இழுத்து வருபவர்களும் அவர்கள்தாம்.
இப்போது அதற்கு ஆபத்து வந்திருக்கிறது.
எம்ஜிஆர் மரணத்திற்கு பிந்தைய நிகழ்வுகளும், ஜெயலலிதா மரணத்திற்குப் பிந்தைய நிகழ்வுகளும் காட்சி அளவில் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கக் கூடும். ஆனால், இருவரது மரணத்தின் போதும் நிலவிய அரசியல் புறச்சூழலில் பெரும் வேறுபாடு உள்ளது.
எம்.ஜி.ஆர் மரணத்தின் போது, திமுகவைத் தவிர, அதிமுகவுக்கு பெரிய எதிரிகள் வேறு யாருமில்லை. காங்கிரசுக்கு கடைசிவரை எம்ஜிஆர் நல்ல பிள்ளையாகவே நடந்து கொண்டதால், இந்திரா காந்தியும் சரி, ராஜீவ் காந்தியும் சரி, இருவருமே அதிமுகவை நசுக்க முனையவில்லை. ஆனால், ஜெயலலிதா மரணத்தின் போது, இந்திய அளவில் நிலவிய அரசியல் தட்பவெட்பமே வித்தியாசமானது.
மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி. அதுவும் மோடி தலைமையில். வடக்கிலும், கிழக்கிலும் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி மோடியின் பாரதிய ஜனதா தனது காலை ஊன்றி வரும் நேரம். அசைந்து கொடுக்காத மாநிலங்களில் அது தனது சித்து விளையாட்டுகளை தருணம் பார்த்து தொடங்கி வருகிறது. பாரதிய ஜனதாவின் கண்ணை உறுத்தி வரும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள பெரிய அரசியல் ஆய்வு தேவையில்லை.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது ,என் கண்ணுக்கெட்டிய தூரத்தில் எதிரிகளையே காணவில்லை என்று முழங்கிய ஜெயலலிதா, “பார்த்துவிடுவோம் இந்த லேடியா அந்த மோடியா என்று” என சூளூரைத்தார்.
ஜெயலிலதாவின் அந்திம காலத்தில் அவர் அடைந்த அரசியல் வெற்றிகள் இரண்டையுமே (2014 நாடாளுமன்றம், 2016 சட்டப்பேரவை) அவர் ரசித்ததாகத் தெரியவில்லை. அவரது தோற்றத்தில் தென்பட்ட சோர்வே அதனை உணர்த்தியது.
39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 37 தொகுதிகளை அள்ளியது. மத்தியில் அறுதிப்பெரும்பான்மை வெற்றியுடன் ஆட்சியமைத்த மோடியின் பாரதிய ஜனதாவுக்கு, தமிழகம் செருப்பிடை புகுந்த சிறு கல்லாக இடறியதில் எந்த வியப்பும் இல்லைதானே?
தமிழகம் என்பது அவருக்கு எரிச்சலூட்டும் மாநிலங்களில் ஒன்றாக மாறியது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அடைந்த அமோக வெற்றி, அவரது அந்த எரிச்சலை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கும் என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே!
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை சிறை செல்ல வைத்த தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தில் அவருக்குக் கிடைத்த விடுதலை எல்லாமே தமிழத்தின் மீது, மைய அரசுக்கிருந்த அரசியல் எரிச்சலின் இருவிதமான பக்க விளைவுகளே!
இதன் தொடர்ச்சியாக ஜெயலலிதாவின் உடல் நலம் குன்றியதாக கூறி, அவர் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டதும் (எல்லாமே கூறப்பட்ட தகவல்கள் மட்டுமே), பின்னர் அவர் மரணமடைந்ததுமாக தொடர்ந்த நிகழ்வுகள் எதுவுமே இயல்பாகவோ, வெளிப்படையாகவோ நடந்தவை அல்ல.
ஓ.பன்னீர்செல்வத்தின் திடீர் போர்க்கொடியும் இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியே!
இப்போது, ஜெயலலிதாவின் பிம்பத்தை நம்பி வாக்களித்த தமிழக மக்களுக்கும் சரி, அதே பிம்பத்தை வைத்து அரசியல் வியாபாரம் செய்து வந்த கும்பலுக்கும் சரி என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேறு ஒரு பிம்பத்தைத் தேடி அலைவதைத் தாண்டி மாற்று அரசியலை சிந்திக்கும் திராணி இரண்டு தரப்பினருக்குமே இல்லை. எதிர்பார்க்கவும் முடியாது.
இதில்அதிமுக நிர்வாகிகள், முக்கியப் புள்ளிகளின் நிலை திரிசங்கு சொர்க்கமாகி விட்டது. சசிகலாவை ஆதரிப்பதா.. பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதா… என்ற கேள்விக்கு அத்தனை எளிதாக அவர்களால் விடை காண முடியவில்லை.
பிப்ரவரி 9ம் தேதி சசிகலா, பன்னீர்செல்வம் இருவரையுமே சந்தித்து கடிதங்களையும், மனுக்களையும் வாங்கிக் கொண்ட ஆளுநர், மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதன் அடுத்தடுத்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாக அரங்கேறும்.
இப்போது சசிகலாவா, பன்னீர்செல்வமா என்பதுதான் தமிழகத்தின் முன் உள்ள பிரச்னை ஆகிவிட்டது.
இரண்டிலும் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற கதைதான்!
எனினும், அதிமுக என்ற கட்சியின் பிரச்னையாக மட்டுமின்றி, தமிழக அரசை பொறுப்பேற்று நடத்திச் செல்லும் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை தொடர்பானது என்பதால், யாரும் இதை ஒதுக்கிவைத்து விட முடியாது என்பது உண்மைதான்.
ஆனால்…
ஜெயலலிதா முதல்முறையாக ஆட்சிக்கு வந்த 1991 முதல் நடைபெர்ற அதிகார அத்துமீறல்களும், சுரண்டப்பட்டதும், சுருட்டப்பட்டதும் கொஞ்சமா… நஞ்சமா… சபையர் திரையரங்கம் தொடங்கி பீனிக்ஸ் மால் வரை, சிறுதாவூர், கோடநாடு என விரியும் பங்களாக்கள்… கங்கை அமரன்களிடம் பிடுங்கப்பட்ட பையனூர் பங்களாக்கள் (அவர் மட்டும்தான் இத்தனை ஆண்டுகள் கழித்தேனும் வெளியில் சொல்லுகிறார். ஜெயலலிதா ஆவி பற்றிய பயம் அவருக்கு இல்லை போலும்) வரை… எத்தனை அபகரிப்புகள்… எத்தனை கொள்ளைகள்… எத்தனை வேட்டைகள்… எல்லாம் அத்தனை எளிதில் மக்களுக்கு மறந்து போனதா…
சசிகலாவை வேலைக்காரி என சிலர் எள்ளி நகையாடுகிறார்கள்… எந்த வேலைக்காரியாவது மிடாஸ் போன்ற மதுபான ஆலை வைத்திருக்கிறாரா…
பணிவானவர் பன்னீர்செல்வம் என்கிறார்கள். உண்மைதான். ஜெயலலிதா காலில் அவர் விழுந்து வணங்கிய கோணத்தில், வேறு எந்த மனித உடலையும் வளைத்து யாரும் வணங்க முடியாதுததான். அந்தக் கும்பிடை அவர் நாட்டின் நன்மைக்காகவா விழுந்து போட்டார்?
இத்தனை ஆண்டுகாலமாக இல்லாத ஞானம் இப்போது மட்டும் வந்தது எப்படி? கொடூரமான தாதா ஒருவனின் மரணத்திற்குப் பின்னர், பலவீனமான நிலையில் இருக்கும் அடுத்த தலைவனைப் போட்டுத்தள்ளும் அடியாள் ஒருவனின் மனநிலை தவிர இதில் வேறு என்ன சிறப்பை நீங்கள் பார்த்துவிட முடியும். இனமான உணர்சுவை சசிகலாவிடமும், சுயமரியாதையை பன்னீர்செல்வத்திடமும் தேடிப்பார்த்து புளகாங்கிதம் அடையும் அவல நிலை தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்டு விட்டதுதான் வேதனைக்குரியது.
ஆக, இரண்டு கொள்ளையர்களில் யார் நல்லவர், யார் சிறப்பாக ஆட்சி நடத்துவார்கள் என்ற ஆராய்ச்சியைத் தாண்டி, இது முற்றிலும் நிராகரிக்க வேண்டிய கூட்டம் என்ற தீர்க்கம் யாரிடமுமே இல்லாமல் போனது ஏன்?
சசிகலாவை இனமான அடிப்படையில் ஆதரிப்பது எத்தனை அபத்தமோ, அதைவிட அபத்தமானது பன்னீர்செல்வத்தை ஆதரிப்பது. அவரைப் பின்னணியில் இருந்து – நாங்கள் இல்லை… நாங்கள் இல்லை – என்று சொல்லிக் கொண்டே ஆட்டுவித்துக் கொண்டிருப்பது பாஜக பரிவாரக் கும்பல்தான் என்பது இரண்டு கண்களும், காதுகளும் செயல்படாதவர்களுக்குக் கூட தெரியாத ரகசியமாக இருக்க முடியாது. “ஆனாலும் பரவாயில்லை… நாங்கள் தலைகீழாகத்தான் குதிப்போம்” எனும் கதையாக, பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் அரசியல் நிலைப்பாடுக்கும், கொள்ளிக்கட்டையால் தலையைச் சொரிந்து கொள்வதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.
90களின் இறுதியில் அதிமுகவும், திமுகவும் போட்டி போட்டுக் கொண்டு பாரதிய ஜனதாவை அழைத்து வந்ததன் விளைவுதான், தமிழ்ச் சமூகத்தின் உளவியலில் தற்போது படிந்துள்ள காவிப்படலம். பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதன் மூலம், காவிப் பரிவாரத்திற்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் வேலையை மீண்டும் செய்ய வேண்டுமா என்பதை, ஆதரவுக் குரல் எழுப்புவோர் சிந்திக்க வேண்டும்.
ஊடகங்களின் நிலையையோ சொல்லவே வேண்டாம். சொல்லவும் நா கூசுகிறது. ஒரு சமூகத்தின் மனச்சாட்சியாகவும், அதனை நல்வழிப்படுத்த வேண்டிய இடத்திலும் இருக்கும் ஊடகங்களும், பத்திரிகைகளும், குறைந்த பட்ச அறிவு நாணம்கூட இன்றி குழல் எடுத்து ஊதிக் கூத்தாடுகின்றன.
மக்களின் மனச்சாட்சி எந்த நிலையிலும் விழித்துவிடக் கூடாது என்பதில் மிகவும் விழிப்புடனேயே செயல்படுகின்றன அனைத்து ஊடகங்களும். காரணம், எந்த ஊடகமும் பத்திரிகையாளர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. ஜெயலலிதாவுக்கும், பன்னீர்செல்வத்துக்கும் இருந்த அதே உறவுதான், பத்திரிகை – ஊடகதாரிகளுக்கும் அவர்களது முதலாளிகளுக்கும் இடையே தற்போது உள்ள உறவு.
எஞ்சிய காலத்திற்கும் சமூகத்தை கூட்டாக கொள்ளையடிக்க ஏதுவானது சசிகலாவுடனான நெட்-ஒர்க்கா, பன்னீருடனான பந்தமா என்பதுதான் ஊடக, பத்திரிகை அதிபர்களின் தற்போதைய கவலை.
என்குரல் இதுதான், என் சமூகத்திற்கு தேவை இதுதான் என்று உரத்துப்பேச,
விடுதலையை தன் சொந்தச் சொத்தைச் செலவழித்து நடத்திய பெரியாரைப் போன்றோ,
முரசொலியை கையெழுத்துப் பிரதியாக நடத்திய இளம்பருவக் கருணாநிதியைப் போன்றோ,
தன் எழுத்தை மட்டுமே வலிமையாகக் கொண்டு திராவிட நாடு ஏட்டை நடத்திய அண்ணாவைப் போன்றோ,
தன் மனைவியின் நகைகளை விற்று “சரஸ்வதி” இலக்கிய இதழை நடத்திய ஜெயபாஸ்கரனைப் போன்றோ,
வணிக நிறுவனத்திற்காக வர்த்தகப் பெயரில் நடத்தினாலும் சுபமங்களாவை சமரசமற்ற கருத்தியல் இதழாக கம்பீரத்துடன் ஆசிரியராக இருந்து நடத்திய கோமல் சாமிநாதனைப் போன்றோ,
எழுத்து மட்டுமே தனக்கு சுவாசம் என்ற பிடிவாதத்துடன் “எழுத்து” இதழை நடத்திய சி.சு. செல்லப்பாவைப் போன்றோ,
இன்னும், இன்னும் கருத்துகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒற்றைப் பிடிவாதத்துடன் சிற்றிதழ்களை நடத்திய நெஞ்சுரமும், நேர்மைத் திறமும் மிக்க எத்தனையோ நூற்றுக்கணக்கான தீவிர இதழாளர்களைப் போன்றோ,
ஒரே ஒருவர் கூட சொந்தமாக பத்திரிகையையோ, ஊடகத்தையோ நடத்த முடியாமல் போனது, தமிழ்ச் சமூகத்திற்கு நேர்ந்த கெடுவாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.
வர்த்தகச் சூதாடிகளால் மட்டுமே நிர்ணயிக்கப்படும் இந்த போலி ஜனநாயகத்தில், நான்கு தூண்கள் என்ன நாற்பது தூண்கள் இருந்தாலும், மக்கள் விழித்தெழாதவரை எந்த நாசத்தையும் தடுக்க முடியாது.
எனினும், பிதற்றல்கள் நிரம்பி வழியும் சமூக வலைத்தளங்களில், பாசாங்கு இல்லாத கருத்துகள் சிலவும் பகிரப்படுவது, இத்தனை மோசமான சூழலிலும் சிறிய ஆறுதலை அளிக்கிறது. அது இன்னும் கூரிய சிந்தனைகளால் செழுமைப் பட வேண்டியது காலத்தின் தேவையாகிறது.
இப்படியாக, அறிவு வெளி அனைத்தும் அதிகார வர்க்கத்தின் அமில வீச்சில் பொசுக்கப்பட்டு, மூளை கருக்கப்பட்ட மொன்னைச் சமூகத்தில், சசிகலாவா, பன்னீர்செல்வமா என்ற பட்டிமன்றம் பரவலாக நடைபெறுவதில் வியப்பொன்றுமில்லைதான்.
எங்களுக்கு இவர்களைப் போன்ற கொள்ளையர்கள் இனி வேண்டாம், நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படும் நல்லவர்கள் வேண்டும் என்ற குரலை, ஒருமித்து எழுப்பும் திராணியை தமிழ்ச் சமூகம் பெற வேண்டும் என்ற கனவைத் தவிர, எதிர்காலத்தை வென்றெடுப்பதற்கு நம்மிடம் வேறு எந்த ஆயுதமும் இல்லை.
அந்தக் கனவை மட்டுமேனும் காப்பாற்ற இன்னுமொரு எச்சரிக்கையும் நமக்குத் தேவைப்படுகிறது. இந்த களேபரத்தை பயன்படுத்தி, ராகவா லாரன்சுகளும், கமல்ஹாசன்களும் மெல்லக் களம் நுழையப் பார்க்கிறார்கள்.
20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், புராணிக, வர்ணாசிரமவாதிகளால் கட்டிப்போடப்பட்டிருந்த கலை உலகத்தை, திராவிட இயக்கம், தீவிரமான கருத்துப் போர் ஒன்றை நடத்திக் கைப்பற்றியது.
பதறியது பார்ப்பனியம்.
எம்.ஜி.ஆர் என்ற மாறு வேடத்தில் அது கலை உலகிற்குள் ஊடுருவியது. தமிழ்ச் சமூகத்தின் மூளை, நாடி, நரம்பனைத்தும் புகுந்து தன்னை அது மீளுருவாக்கம் செய்து கொண்டது. இடஒதுக்கீட்டுக்கு எதிரான அரசாணை பிறப்பித்தது போன்ற எம்ஜிஆரின் செயல்பாடுகளில் அது அவ்வப்போது வெளிப்பட்டது. எம்ஜிஆரிடம் ஏமாந்த திராவிட இயக்கம், பின்னர் விழித்துக் கொண்டதால், பார்ப்பனியத்தின் அந்த வியூகம் தமிழகத்தில் முழுமையாக பலிக்கவில்லை.
அதே போல, தமிழ்ச் சமூகத்தின் பலவீனமான மற்றொரு தருணம் இது. ராகவா லாரன்சுகளும், கமல்ஹாசன்களும் இதனைப் பயன்படுத்தி தமிழ் இளைஞர்களின் மூளையைச் சுவீகரித்துவிடப் பார்க்கிறார்கள்.
பார்ப்பனியத்திற்கும், பாசிச பிற்போக்குத் தனத்திற்கும் பிறப்பு அடிப்படையிலான ஜாதி மட்டுமே அளவுகோல்கள் இல்லை. (இளையராஜா ஓர் உதாரணம்). எந்த ஜாதியில் பிறந்தவனின் மூளைக்குள்ளும் பார்ப்பனிய, வர்ணாசிரம மூர்க்கம் இடம் கொடுத்தால் எளிதில் புகுந்து கொள்ளும். அவற்றை இனம் கண்டு தோற்கடிக்கும் அறிவுத் திராணி நமது இளைஞர்களுக்கு வேண்டும்.
தமிழ் இளைஞர்களே.… எச்சரிக்கையாக இருங்கள். இருபதாம் நூற்றாண்டில் தமிழச் சமூகத்தின் மீது கவிந்து அமிழ்த்திய திரையுலக பிம்ப அரசியலில் இருந்து இதுவரை நாம் மீள முடியாமல் தவிக்கிறோம். மீண்டும் அவர்களை அரசியல் களத்திற்குள் அனுமதித்து விடக் கூடாது என்ற விழிப்புணர்வோடு அரசியலை அணுகுங்கள். திரையுலகைச் சேர்ந்த யாராக இருந்தாலும் அவர்களை அரசியலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பதில் சமரசமற்ற உறுதியோடு செயல்படுங்கள். அரசியல் என்பது, கருத்துகள் பொருத வேண்டிய களம். அதில் காலிகளை இனியும் அனுமதிக்கக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வே நமது இப்போதைய தேவை.
மொத்தத்தில் அரசியல் களத்தில் இருந்து குப்பைகளை அகற்ற வேண்டிய தருணம் இது.
__________________________________________________________________________