சபரிமலைக்குச் செல்வதற்காக தமிழகத்தை சேர்ந்த பெண்கள் குழுவினரும், அதைத் தடுப்பதற்காகப் பக்தர்களும் திரண்டுள்ளதால் பம்பையில் பரபரப்பு நிலவுகிறது.
பத்தனம்திட்டை மாவட்ட ஆட்சியர் 144 தடையுத்தரவை டிசம்பர் 27வரை நீட்டித்துள்ளார்.
சென்னையில் உள்ள மனிதி என்னும் அமைப்பைச் சேர்ந்த ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்கள் ஒரு குழுவாக சபரிமலைக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
11பேர் கொண்ட அந்தக் குழுவினர் கேரள காவல்துறையிடம் பாதுகாப்பும் கோரியுள்ளனர்.
இந்தக் குழுவினர் கோட்டயம் ரயில் நிலையத்தில் இறங்கியபோதே அவர்களுக்கு எதிரக ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்கள் குழுவினர் கோட்டயத்தில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலின் அடிவாரத்தில் உள்ள பம்பை முகாமுக்கு இன்று அதிகாலை வந்தனர்.
இந்தச் செய்தியறிந்த ஏராளமான பக்தர்களும் அங்குக் கூடி அவர்களைத் தடுத்ததுடன் சாலையில் அமர்ந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் அப்பகுதியில் மேலும் அதிகமானோர் கூடுவதைத் தடுப்பதற்காகப் பம்பைக்குச் செல்லும் பேருந்துப் போக்குவரத்தை நிறுத்தினர்.
போராட்டம் நடத்தும் பக்தர்களிடம் இருந்து பெண்களைக் காப்பதற்காகக் காவல்துறையினர் பாதுகாப்பு வளையம் அமைத்துள்ளனர்.
தங்களைக் கோவிலுக்கு அனுமதிக்கும் வரை அங்கிருந்து செல்லப்போவதில்லை எனக் கூறிப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே சபரிமலையில் போராட்டம் நடத்துவதற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள 144தடையை டிசம்பர் 27வரை நீட்டித்துப் பத்தனம்திட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதை மீற வேண்டாம் என இரு பிரிவினரையும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபை மீறுவதைத் தாங்கள் அனுமதிக்க முடியாது எனப் பந்தளம் அரச குடும்பம் தெரிவித்துள்ளது.
மீறிப் பெண்கள் செல்ல முயன்றால் கோவிலை மூடப்போவதாகவும் எச்சரித்துள்ளது. மரபைக் கட்டிக்காப்பதற்காகச் சாவதற்கும் தயாராக இருப்பதாக இந்து ஐக்கிய வேதி அமைப்பின் தலைவரான சசிகலா அறிவித்துள்ளார்.
சபரிமலை நிலவரத்தை ஆய்வு செய்வதற்காகக் கேரள உயர்நீதிமன்றம் 2 நீதிபதிகள் உட்பட மூவர் அடங்கிய ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும்,
அந்தக் குழு எடுக்கும் முடிவை அரசு செயல்படுத்தும் என்றும் கேரளக் கோவில்கள் வாரியத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.