சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் :பிரதமர் மோடி அறிவிப்பு..

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மாநிலங்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஆட்சி மத்தியில் தொடரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற அதிமுக பாஜக பாமக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காஞ்சி மண்ணை வணங்குவதாக குறிப்பிட்டார்.

தமிழகத்தினுடைய முன்னேற்றத்திற்காக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறிய பிரதமர், பல நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதை பட்டியலிட்டார்.

எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்ததை குறிப்பிட்ட பிரதமர், திரையுலகத்தில் மட்டும் அல்லாது மக்கள் மனதிலும் கோலோச்சியவர் எம்ஜிஆர் என புகழாரம் சூட்டினார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சி தலைவர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.

தமிழகத்தில் இருந்து செல்லும் விமானங்கள், வந்து சேரும் விமானங்களுக்கான அறிவிப்பு தமிழ் மொழியில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு 14 ஆயிரம் வீடுகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் சிறை வைக்கப்பட்டு இருந்த பாதிரியார் பிரேமை, 8 மாதம் முயற்சி மேற்கொண்டு மீட்ட்டதையும்,

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் 2 நாளில் பாகிஸ்தானில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மத்திய அரசின் நடவடிக்கையால் 1900 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பதையும் மோடி குறிப்பிட்டார்.

தேசிய ஜனநாய கூட்டணியின் செயல்பாடு மாநில அரசுகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வதாக உள்ளது என்று தெரிவித்த பிரதமர், துரதிருஷ்டவசமாக காங்கிரஸ் கட்சியால் மாநில அரசுகளின் விருப்பங்களை நிறைவேற்ற முடியாது என்றார்.