
சென்னை நந்தம்பாக்கத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்
சென்னை, ஆலந்தூர் வட்டம், நந்தம்பாக்கத்தில் ரூ. 116 கோடி மதிப்பீட்டில் சுமார் 56 ஏக்கர் நிலப்பரப்பில் நிதிநுட்ப நகரம் (FinTech City) அமைப்பதற்கும் அங்கு முதற்கட்டமாக ரூ. 254 கோடி மதிப்பீட்டில் 5.6 லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் (FinTech Tower) என்ற அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிதிநுட்ப நகரம் உலகத் தரம் வாய்ந்த அதிநவீன வங்கி, காப்பீடு உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படுகிறது.56 ஏக்கரில் அமையும் தொழில்நுட்ப நகரத்தில் வணிக குடியிருப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இடம்பெறுகின்றன. நிதிநுட்ப நகரத்தில் நீடித்த மற்றும் பசுமை உட்கட்டமைப்புகள், பலவகை போக்குவரத்து இணைப்பு வசதிகளும் அமைக்கப்படுகின்றன. 5.6 லட்சம் சதுர அடியில் நிதி நுட்ப கோபுரத்திக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. 80,000 பேருக்கு வேலைவாய்ப்பு, ரூ.12,000 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நிதிநுட்ப நகரம் அமைகிறது.
LEED – பிளாட்டினம் தரமதிப்பீடு பசுமைக் கட்டிடம், 250 இருக்கைகள் கொண்ட கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. 7,000 பேருக்கு வேலை வாய்ப்பு, ரூ. 1,000 முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கோபுரம் அமைக்கப்படுகிறது. இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,” உலக நிறுவனங்களை தமிழ்நாடு ஈர்த்துள்ளதால் இங்கு முதலீடு செய்ய சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.தமிழ்நாடு முழுவதும் பரவலாக முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சென்னையைத் தொடர்ந்து கோவை, திருச்சி, மதுரையில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும்.
தற்போது அதிவேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம், புத்தாக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டிலும் சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளன.நிதி நுட்பம் தொழில் சூழல் அமைப்பைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.தொழில் நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப இளைஞர்களின் திறன்களை வளர்த்து முன்னேறுவதில் கண்ணும் கருத்துமாக உள்ளது. தமிழ்நாட்டை நிதி நுட்ப கொள்கை நகரங்களில் முதன்மையானதாக மாற்றுவதற்காக தனிக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.புதிதாக அமைக்கப்படும் நிதிநுட்ப நகரத்தில் இந்திய, சர்வதேச நிறுவனங்களுக்கு தேவையான வசதி செய்து தரப்படும்.நிதி நுட்ப நகரம் மூலம் ரூ.12,000 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 80,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். மாநிலம் முழுவதும் தொழில் நிறுவனங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.