சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கான(Chennai Film Festival )அறிவிப்பை விழா ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
சென்னையில் 16வது ஆண்டாக நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 13ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கோவா சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று முடிந்த நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் திரைப்பட விழாக்கள் நடத்த ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.
அந்தவகையில் சென்னையின் புகழ்பெற்ற சர்வதேச திரைப்பட விழா 16வது ஆண்டாக வரும் டிசம்பர் 13ம் தேதி தொடங்குகிறது.
2002 முதல் நடைபெற்று வரும் இந்த திரைப்பட விழா இந்தியாவின் முக்கிய திரைப்படம் சார்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்தாண்டு நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய இந்திய திரைப்படை திறனாய்வு கழக பொதுச்செயலாளர் தங்கராஜ், 16வது ஆண்டாக நடைபெறும் சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 13ம் தேதி தொடங்குவதாக தெரிவித்தார்.
விழாவில் முதல்நாளில் ஜப்பானிய மொழி திரைப்படமான ’ஷாஃப்லிஃப்டர்’ திரையிடப்படுகிறது.
இது கேன்ஸ் விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருதை வென்ற படமாகும். தவிர, சர்வதேசளவில் நடைபெறும் விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுக்களைப் பெற்ற திரைப்படங்களும் இந்த விழாவில் திரையிடப்படுகின்றன.
மேலும், ஆஸ்திரேலியா, ஸ்வீடன், தென் கொரியா உள்ளிட்ட 59 நாடுகளை சேர்ந்த 150 படங்கள் வரை திரையிடப்படுகின்றன.
தமிழில் இந்தாண்டு வெளியான 96, பரியேறும் பெருமாள், மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட 12 படங்களும் திரையிடப்படவுள்ளன.
விழாவில் இறுதிநாளான டிசம்பர் 20ம் தேதி திரைப்பட விழாவில் பங்கெடுத்த திரைப்படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன.
விழாவில் பங்கெடுத்துள்ள படங்களை சென்னை தேவி, தேவிபாலா, அடையார் தாகூர், கசேரோல் உள்ளிட்ட நான்கு இடங்களில் திரையிடப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட் டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.
புக்மைஷோ உள்ளிட்ட இணையதளங்கள் மூலமாக ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் பார்வையாளர்கள் முன்பதிவு செய்யலாம்.
நபர் ஒருவருக்கு ரூ. 1000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்கள், திரைப்பட சங்கங்களை சார்ந்தவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சலுகை அளிக்கப்பட்டு ரூ. 500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.