முக்கிய செய்திகள்

கும்பகர்ணனைப் போல் உறங்காதீர்கள்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் குட்டு

கும்பகர்ணனை போல உறங்காமல் நீதிமன்ற உத்தரவுகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

1989-ல் தமிழக பொது நூலக துறையையும் மாவட்ட நூலகத் துறையையும் இணைத்து ஒரே அமைப்பாக அறிவித்த தமிழக அரசு, மாவட்ட நூலகங்களில் முதல் நிலை நூலகர்களாக பணியாற்றியவர்களை 3-ஆம் நிலை நூலகர்களாக மாற்றி உத்தரவிட்டது. இதற்கு எதிரான வழக்கில் பதவி உயர்வு விதிகளை வகுக்க தமிழக நிர்வாகத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியது.

ஆனால் 17 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அரசு தற்காலிக விதிகளை வகுத்தது. இந்நிலையியில் மாவட்ட நூலகர்களாக இருந்து, விதிகளின் படி 2 மற்றும் 3-ஆம் நிலை நூலகர்களாக மாற்றப்பட்ட 4 பேர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், குறித்த காலத்தில் விதிகளை வகுத்திருந்தால், வழக்கு மூலம் நீதிமன்ற நேரம் வீணடிக்கப்பட்டிருக்காது என்று தெரிவித்தனர்.

இனியாவது கும்பகர்ணனை போல உறங்காமல், நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு உடனுக்குடன் அமல்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள் 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்காலிக விதிகளை வகுத்த தமிழக அரசு, மனுதாரர்களுக்கு வழக்குச் செலவாக தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டனர்.

Chennai High Court Advise to TN Govt