பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது குறித்து வரும் ஜூன் 7-ந்தேதிக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்தும் விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வுப்பெற்ற நீதிபதி மேற்பார்வையிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மீனாட்சி உள்பட 10 பேர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர்.
மேலும், அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ.,க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை குறிப்பிட்டதன் மூலம், பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை பாதுகாக்கும் கடமையில் இருந்து தமிழக அரசு தவறிவிட்டது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை பாதிக்கப்பட்ட பெண்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு தவறிவிட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளியிடப்பட்டதால் மற்றவர் யாரும் புகார் கொடுக்க முன்வருவதில்லை.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். பெண் ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள அதிகாரியை கொண்டு இந்த வழக்கை விசாரிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, பொள்ளாச்சி வழக்கை சரிவர விசாரிக்காத போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யவேண்டும். பாலியல் கொடுமை சம்பவத்தில் நடந்தவைகளை உண்மை கண்டறியும் குழு அமைத்து அறிக்கை பெறவேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பு வக்கீல்கள் வாதிட்டனர்.
இதையடுத்து, இந்த வழக்குகளுக்கு தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி,பி., உள்ளிட்டோர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற ஜூன் 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.