சென்னை ஐ.ஐ.டி-யில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஐ.ஐ.டி மெட்ராஸ் மற்றும் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறைகளுக்கிடையே சாகர்மாலா புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி) தேசியத் துறைமுகம், நீர்வழிகள், கடலோரத் தொழில்நுட்ப மையம் உள்ளிட்டவற்றை அமைக்க, மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று அடிக்கல் நாட்டுகிறார். அதற்கான விழாவில், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய நிதின் கட்கரி, ‘தேசிய நீர்வழித் திட்டம் தொடர்பான உதவிகளுக்காகவே தொழில்நுட்ப மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையம், கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துக்கு வலு சேர்க்கும். மேலும், மெரைன் டாஸ்க் ஃபோர்ஸ் தொடர்பான பயன்பாடுகளுக்கு மெத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தியாவில் உள்ள மற்ற ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களுடனும் இணைந்து செயலாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது’ என்றார்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில், ஐ.ஐ.டி மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதில் சம்ஸ்கிருத மொழியில் ‘மகா கணபதி’ வாழ்த்துப் பாடல் பாடினர். அப்போது அனைவரும் எழுந்து நின்றனர். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து ஐ.ஐ.டி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். `மாணவர்கள் தாமாக முன்வந்து சம்ஸ்கிருத மொழியில் பாடினர்’ என்று விளக்கம் கொடுத்துள்ளார்.