வங்கக் கடலில் 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சென்னையில் அதிகாலையில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
சென்னைக்கு 609 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக் கடலில் அதிகாலை 7 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு – வட கிழக்கில் கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 1 ஆக பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழிப்பேரலை தொடர்பாக எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
நில நடுக்கம் காரணமாக சென்னையில் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வை உணர்ந்த மக்கள்,
இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். டைடல் பூங்கா பகுதியில் நில அதிர்வு நன்கு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உறக்கத்தின் போது நில அதிர்வை உணர்ந்ததாகவும், உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் பலர் சமூக வலைத்தளங்களில் அச்சத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
நில அதிர்வு குறித்து தகவல் அறிந்ததும், சென்னையில் வசிக்கும் தங்கள் உற்றார், உறவினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பலரும் விசாரித்து வருகின்றனர்.