சென்னை-மதுரை இடையே 12 ஆண்டுகளாக நடந்த பணி நிறைவு: இரட்டை பாதையில் ரயில்கள் ஓடத் தொடங்கின..


தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக நடந்துவந்த சென்னை – மதுரை இரட்டை ரயில் பாதை பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை அடுத்து, புதிதாக அமைக்கப்பட்ட 2-வது தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தி, ரயில்களை இயக்க ஒப்புதலும் அளித்தார். இதைத் தொடர்ந்து, இந்த புதிய பாதையில் நேற்றுமுதல் ரயில்கள் ஓடத் தொடங்கின. இந்த புதிய இரட்டை பாதை மூலம் சென்னையில் இருந்து மதுரை வரை புதிதாக 10 விரைவு ரயில்கள் இயக்க முடியும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன்மூலம், ஆயிரக்கணக்கானோர் பயன்பெறுவார்கள்.

தமிழகத்தின் வடகோடியில் இருக்கும் தலைநகர் சென்னையில் இருந்து கடைகோடி மாவட்டமான கன்னியாகுமரி வரையிலான ரயில்பாதை முக்கியமான வழித்தடமாகும். இந்த பாதை செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் என முக்கியமான நகரங்களை இணைக்கிறது. தற்போது, இந்த வழித்தடத்தில் சென்னை எழும்பூரில் இருந்து 28 விரைவு ரயில்களும், பிற மாநிலங்களில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக தென் மாவட்டங்களுக்கு 8 விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இது, பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள வழித்தடம் என்பதால், கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால், போதிய ரயில் பாதைகள் இல்லாததால், கூடுதல் ரயில்கள் இயக்க முடியவில்லை. இதன் காரணமாக, சென்னை – கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

சென்னையில் இருந்து குமரி வரையிலான 739 கி.மீ தூரத்துக்கு ஒருவழிப் பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்றும் பணிகள் 1998-ல் தொடங்கப்பட்டது. பிறகு, சென்னை – திருச்சி – மதுரை – நெல்லை – நாகர்கோவில் – கன்னியாகுமரி ஆகிய பகுதிகளை இணைக்கும் ரயில் பாதையை மின்மயத்துடன் கூடிய இரட்டைவழிப் பாதையாக மாற்றுவதற்கான பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. இதில், தமிழக மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான சென்னை – மதுரை இரட்டை பாதை பணி சமீபத்தில் நிறைவடைந்தது.

சென்னை – செங்கல்பட்டு இடையிலான 56 கி.மீ. தூரத்துக்கும், மதுரை – திண்டுக்கல் இடையிலான 66 கி.மீ. தூரத்துக்கு மட்டும் ஏற்கெனவே இரட்டை ரயில் பாதை இருந்தது. பிறகு, செங்கல்பட்டு – விழுப்புரம் இடையே 103 கி.மீ. தூரத்துக்கு இரட்டை ரயில் பாதை பணி முடிக்கப்பட்டது.

இதையடுத்து, விழுப்புரத்தில் இருந்து திண்டுக்கல் வரையிலான 273 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,300 கோடியில் இரட்டை பாதை அமைக்க திட்டமிட்டு, இதற்கான பணிகள் 2006 ஏப்ரலில் தொடங்கின. தொடக்கத்தில், நிலம் கையகப்படுத்துவது, நிதி ஒதுக்கீடு போன்றவற்றில் சில பிரச்சினைகள் இருந்தன. பின்னர், ரயில்வே பட்ஜெட்டில் மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கியது. இது மட்டுமின்றி, தமிழக அரசும், தெற்கு ரயில்வே அதிகாரிகளும் தொடர்ந்து எடுத்த பல்வேறு நடவடிக்கையால் படிப்படியாக இந்த பணியில் முன்னேற்றம் கண்டது.

இதற்கிடையில், 2016-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில், ‘‘தமிழக மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான சென்னை – கன்னியாகுமரி இரட்டை பாதை திட்டப்பணிகளை விரைவுபடுத்த போதிய அளவில் நிதி ஒதுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார். இதையடுத்து, நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவடைந்தன. தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடந்துவந்த விழுப்புரம் – திண்டுக்கல் இரட்டை பாதை திட்டம் தற்போது முடிக்கப்பட்டுள்ளது. இத்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (தெற்கு) மனோகரன் ஆய்வு நடத்தி, ரயில்களை இயக்க ஒப்புதல் அளித்தார். மொத்தம் 273 கி.மீ. தூரம் கொண்ட இத்தடத்தில் விருத்தாசலம், திருச்சி உட்பட 39 ரயில் நிலையங்கள் உள்ளன. திண்டுக்கல் – மதுரைக்கு ஏற்கெனவே இரட்டை பாதை தயாராக இருப்பதால், சென்னை – மதுரை இரட்டை பாதையில் ரயில் சேவை விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த 2-வது வழித்தடத்தில் நேற்றுமுதல் ரயில்கள் ஓடத் தொடங்கின.

முன்பே திட்டமிட்ட ரயில்வே

சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு ரயில்சேவையை விரிவாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தபோது, மீட்டர்கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்றும் பணிகள் நடந்துகொண்டிருந்தன. தாம்பரம் – விழுப்புரம் இடையே இருந்த மீட்டர்கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்ற சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. ஆனால், ரயில் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்ட தெற்கு ரயில்வே, ஏற்கெனவே இந்த வழித்தடத்தில் இருந்த மீட்டர்கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்றாமல், புதிதாக அகலப்பாதை அமைத்தனர். அதன்பிறகு, ஏற்கெனவே இருந்த மீட்டர்கேஜ் பாதை படிப்படியாக அகலப் பாதையாக மாற்றப்பட்டது. இதனால், தாம்பரம் – விழுப்புரம் இடையிலும் இரட்டை பாதை அமைந்துவிட்டது.

10 புதிய ரயில்கள்

தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழக ரயில் திட்டங்களில் மிகவும் முக்கியமானது சென்னை – குமரி இரட்டை பாதை திட்டம். இத்திட்டத்தை வரும் 2022-க்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்து தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். விழுப்புரம் – திண்டுக்கல் இடையே கடந்த 12 ஆண்டுகளாக நடந்துவந்த இரட்டை பாதை பணிகள் தற்போது நிறைவடைந்துவிட்டன. இதில் நிலம் கையகப்படுத்துவதுதான் பெரிய சவாலாக இருந்தது. பணியின் இறுதிகட்டத்தில் மணல் தட்டுப்பாடும் இருந்தது. ஒருவழியாக அவற்றை சமாளித்து, பணிகளை நிறைவு செய்துள்ளோம். இந்த புதிய தடத்தில் 120 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி, ரயில் பாதுகாப்பு ஆணையரும் ஆய்வு நடத்தி, ரயில்களை இயக்க ஒப்புதல் அளித்தார்.

இதன்மூலம் சென்னையில் இருந்து மதுரை வரை இரட்டை ரயில் பாதை கிடைத்துவிட்டது. இந்தப் பாதையில் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் செல்லலாம். ஆனால், 100 கி.மீ வேகம் வரை மட்டுமே செல்ல பாதுகாப்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில சிறப்பு அம்சங்களை மேம்படுத்தினால் முழு வேகத்தில் ரயில்களை இயக்க முடியும். இந்த புதிய இரட்டை பாதை மூலம் சென்னையில் இருந்து மதுரை வரை புதிதாக 10 விரைவு ரயில்கள் இயக்க முடியும். பயண நேரம் 30 முதல் 40 நிமிடங்கள் குறையும். புதிதாக அமைக்கப்பட்டு வரும் சென்னை தாம்பரம் 3-வது முனையத்தில் இருந்து அதிக அளவில் ரயில்களை இயக்குவது வசதியாக இருக்கும். இதற்காக, தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தவும், அதற்காக கூடுதல் நிலங்களை தேர்வு செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

சென்னை – மதுரை இடையே கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்பதால், பல ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

மன அழுத்தம் குறையும்

அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர்கள் கழகத்தின் சென்னை மண்டல இணை செயலாளர் கே.பார்த்தசாரதி: தமிழகத்தின் பிரதான வழித்தடமாக இருக்கும் சென்னை – கன்னியாகுமரி ரயில் பாதையில் இரட்டை பாதை அவசியமானது. ஒருவழி பாதை மட்டுமே இருக்கும்போது, ரயில்களை ஆங்காங்கே நிறுத்தி, மிகவும் கவனத்துடன் இயக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் சிவப்பு சிக்னல் போட்டுவிடுவார்கள். உடனடியாக நிறுத்தி, பச்சை சிக்னல் கிடைக்கும் வரை காத்திருப்போம். இதனால், ரயில்கள் இயக்குவதிலும் தாமதம் ஏற்படும். அதன்பிறகு, பயண நேரத்தையும் சரிகட்ட வேண்டும். இதனால், எங்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. ‘எப்போது புறப்படும்?’ என்று தெரியாமல் பயணிகளும் மிகவும் சிரமப்படுவார்கள். இந்த சூழலில், பல ஆண்டுகளாக நடந்துவந்த சென்னை – மதுரை இரட்டை பாதை பணி முடிந்து, போக்குவரத்து தொடங்கியிருப்பது பொதுமக்களுக்கு மட்டுமல்லாது, எங்களுக்கும் மன நிம்மதியை தந்துள்ளது. இருபுறமும் செல்ல தனித் தனி பாதைகள் கிடைத்துள்ளதால் ரயில்கள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்ல முடியும். விபத்துக்கான வாய்ப்புகளும் குறைவு.

30 நிமிடங்கள் சேமிக்க முடியும்

ஒரே பாதையில் ரயில்கள் செல்வதால், ஆங்காங்கே நிறுத்தி, நிறுத்தி இயக்குவார்கள். இதற்கென முக்கிய ரயில் நிலையங்களுக்கு அருகே லூப் லைன் அமைத்திருப்பார்கள். அந்த பாதையில் ரயில்கள் நிறுத்தப்பட்டு, வரிசையாக ஒவ்வொரு ரயிலாக இயக்கப்படும்.

தற்போது, மதுரை வரையில் இரட்டை பாதை பணி தற்போது நிறைவடைந்துள்ளதால், இனி 30 நிமிடங்கள் வரை சேமிக்க முடியும். ரயில்கள் தாமதமாவது தவிர்க்கப்படும்.

இரட்டை பாதை பணியில் ஈடுபட்ட ரயில்வே அலுவலர்கள் சிலர் கூறும்போது, ‘‘இத்திட்டத்துக்கு நிலத்தை கையகப்படுத்த, அரசு அதிகாரிகளிடம் நேரம் கேட்டு, நீண்ட நேரம் காத்திருந்துள்ளோம்.

தமிழகத்துக்கு முக்கிமான ரயில் திட்டம் என்பதால், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினோம். தினமும் காலை 6 மணிக்கு பணியை தொடங்கிவிடுவோம். பல நாட்களில் தினமும் 15 மணிநேரம் வரை உழைத்தோம். மதுரை வரை பணிகள் நிறைவு பெற்றது மகிழ்ச்சியைத் தருகிறது’’ என்றனர்.

 

ஆம்னி கட்டண கொள்ளைக்கு தீர்வு

சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவில் ஆக்சன் குரூப் (சிஏஜி) என்ற அமைப்பின் இயக்குநர் (ஆலோசகர்) எஸ்.சரோஜா: தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதனால், ரயில் போக்குவரத்து தேவை தற்போது மேலும் கூடியுள்ளது. ஆனால், தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களின்போது ரயிலில் டிக்கெட் கிடைக்காததால், மக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளை நாடுகின்றனர். அவர்களும் இதை சாதகமாக பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். சென்னை – மதுரை இரட்டை பாதை தயாராகிவிட்டதால், அதிக ரயில்களை இயக்க வேண்டும். இதன்மூலம் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்கலாம். இந்த வழித்தடத்தில் சுவிதா போன்ற சிறப்பு கட்டண ரயில்களை அதிக அளவில் இயக்காமல், ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் சாதாரண கட்டண விரைவு ரயில்கள், பாசஞ்சர் ரயில்களை இயக்க வேண்டும்.

வருவாய் அதிகரிக்கும்

டிஆர்இயு துணைத் தலைவர் ஆர்.இளங்கோவன்: விழுப்புரம் – திண்டுக்கல் இரட்டை பாதை திட்டப் பணிகளை ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்விஎன்எல்) நிறுவனம் மேற்கொண்டுள்ளது. தொடக்கத்தில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு படிப்படியாக போதிய அளவுக்கு நிலம் கையகப்படுத்தி, பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை பாதை திட்டம் தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி, மணியாச்சி – நாகர்கோவில், கன்னியாகுமரி – நாகர்கோவில் – திருவனந்தபுரம் ஆகிய தடங்களையும் இணைத்து இரட்டை பாதை திட்டத்தை முடித்தால் தெற்கு ரயில்வேயின் வருவாய் பல மடங்கு அதிகரிக்கும்.

மக்களுக்கு வரப்பிரசாதம்

குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம்: ரயில் இரட்டை பாதை மூலம் தென் மாவட்டங்களை இணைக்க வேண்டும் என்ற 30 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியுள்ளது. மதுரை வரை இரட்டை பாதை பணிகள் நிறைவடைந்திருப்பது மிகப் பெரிய வரப்பிரசாதம். கூடுதல் ரயில்களை இயக்கவும், வழக்கமாக செல்லும் விரைவு ரயில்கள் சரியான நேரத்தில் சென்றடையவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எஞ்சியுள்ள பகுதிகளிலும் பணியை முடித்து, கன்னியாகுமரியை இணைத்துவிட்டால், அது தமிழக ரயில் திட்டத்தில் முக்கிய மைல் கல்லாக இருக்கும்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசின் மவுனம் புரியாத புதிராக உள்ளது : ரஜினி டிவிட்..

தமிழகம் முழுவதும் ஏப்.,3ம் தேதி கடையடைப்பு ..

Recent Posts