சென்னை தவிர தமிழகம் முழுவதும் சலூன் கடை மற்றும் அழகு நிலையங்கள் திறக்க அரசு அனுமதி..

சென்னை தவிர தமிழகத்தின் பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் நாளை முதல் முடி திருத்தகங்கள் மற்றும் அழகு நிலையங்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் முடி திருத்தகங்களை திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள முடி திருத்தகங்கள் மற்றும் அழகு நிலையங்களை திறக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் முடி திருத்தும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களையும் பணியமர்த்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முடி திருத்தகங்களில் தனி மனித இடைவெளியை கடைபிடிப்பதோடு, சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் யாரேனும் வந்தால் கடைகளுக்குள் அனுமதிக்கக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கிருமிநாசினி வழங்குவதையும், முகக்கவசம் அணிந்திருப்பதையும் முடி திருத்தக உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அதோடு முடி திருத்தகம் மற்றும் அழகு நிலையங்களில் ஒரு நாளைக்கு 5 முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கடைகளில் குளிர்சாதன வசதி இருப்பின் அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது எனவும் முதல்வர் எடப்பாடி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த நெறிமுறைகள் மட்டுமல்லாது விரிவான வழிமுறைகள் தனியாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 19-ஆம் தேதி முதல் ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில்,

முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர,

பிற பகுதிகளில் முடி திருத்தகங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.