போராட்டத்தை வியாபாரமாக செய்யும் அமைப்புகளால் வழி தவறக்கூடாது : சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்..


போராட்டத்தை வியாபாரமாக செய்யும் அமைப்புகளால் மாணவர்கள் வழி தவறி விடக் கூடாது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் தொடர்ந்து ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டாகத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து ரகளையில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாநிலக் கல்லூரிக்கு சென்ற மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

மாணவர்கள் ஆர்வத்தோடு படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு என்று தெரிவித்த அவர், கற்றுக்கொள்ளும் கலைகள் வாழ்க்கையில் எப்போதும் உதவும் என்று கூறினார்.

படிக்கும்போதே நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தன்னுடைய அனுபவத்தை அறிவுரையாக கூறுவதாக அவர் தெரிவித்தார்.

யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த மாணவர்களுக்குமே கெட்டபெயர் ஏற்படுகிறது என்ற அவர், ஆக்கபூர்வமான செயல்களில் மனதை செலுத்துமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.