அச்சுறுத்தலுக்குப் பணியக்கூடாது: ஊடகங்களுக்கு பத்திரிகையாளர் சங்கம் வேண்டுகோள்

எஸ்.வி.சேகர் வீட்டுக்கு முன்பாக போராடிய பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அச்சுறுத்தலுக்கு ஊடக நிறுவனங்கள் பணியக் கூடாது என சென்னை பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் சங்கம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை:

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்களை சந்தித்த போது, பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தவுடன் அவர் மன்னிப்புக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த எஸ்.வி.சேகர், பத்திரிகையாளர்கள் மீது அருவெறுக்கத்தக்க, ஆபாச தாக்குதல் நடத்தும் பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதில் பெண் செய்தியாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள் எப்படி வேலைக்குச் சேர்க்கிறார்கள் என வக்கிரமான கருத்தை பதிவிட்டிருந்தார்

பத்திரிகையாளர்களை மட்டுமன்றி, ஊடக நிறுவனங்கள் மற்றும் அதன் உயர் பதவிகளில் இருப்பவர்களையும் இந்தப் பதிவில் அசிங்கப்படுத்தியிருக்கிறார். இதனால் கொந்தளித்த பத்திரிகையாளர்கள், எஸ்.வி.சேகரின் வீட்டை முற்றுகையிட்டு ஆவேசமடைந்தனர். பத்திரிகையாளர்களுக்கு மட்டுமன்றி ஊடக நிறுவனங்களின் மீது வீசப்பட்ட அழுக்குக்கு எதிராகவும்தான் இவர்கள் போராடினர். சொல்லப்போனால், சமூக வலைத்தளத்தில் அநாகரிகமாக எஸ்.வி.சேகர் பதிவிட்டதன் எதிர்வினைதான் இது.

இதனால் கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் எஸ்.வி.சேகரை காப்பாற்ற சில சக்திகள் முயற்சிக்கின்றன. இவர்கள் ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு கடும் நெருக்கடி கொடுக்கவும், போராடிய பத்திரிகையாளர்களுக்கு பணி நீக்கம் உள்ளிட்ட அச்சுறுத்தல் தரவும் முயன்று வருகின்றனர். இவர்களுடைய நோக்கத்துக்கு ஊடக நிறுவனங்கள் பணிந்துவிடக் கூடாது என சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

பத்திரிகையாளர்களை பழிவாங்கும் நோக்கத்துக்கு ஊடக நிறுவனங்கள் துணைபோகக் கூடாது என்பதுடன், ஊடக சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் விடப்பட்டுள்ள அச்சுறுத்தல் இது என்பதை உணர வேண்டும் என்றும் சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

– சென்னைப் பத்திரிகையாளர் சங்கம்

Chennai Press Club Press release

ஜப்பான் ரயில் நிலையத்தில் தமிழில் பெயர் பலகை..

சவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…!

Recent Posts