நீங்கள் பயணிக்கும் சென்னை சாலைகளில் பாலங்கள் அனைத்து நான் கட்டியதுதான் முதல்வரே: ஸ்டாலின் பேச்சு..

என்ன சாதனை செய்தேன் என கேட்கிறார் முதல்வர் பழனிசாமி, நீங்கள் தலைநகர் சென்னையில் எங்கே சுற்றினாலும், நான் கட்டிய பாலங்களில் பயணம் செய்யாமல் இருக்க முடியாது, ஒன்றல்ல, ஒன்பது பெரிய பாலங்களையும், 49 குறும்பாலங்களையும் கட்டியவன் நான் என ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

தர்மபுரி மாவட்ட திமுக சார்பில் நடந்த தமிழகம் மீட்போம் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக ஸ்டாலின் பேசியதாவது
“ஸ்டாலின் என்ன சாதனை செய்திருக்கிறார்’ என்று கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஸ்டாலின் என்ன சாதித்துள்ளார் என்பதை தமிழ்நாட்டு மக்களிடம் கேளுங்கள். நான் செய்த சாதனைகள் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்.

சென்னை மாநகர மேயராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் நான் இருந்த காலத்தில் மகத்தான சாதனைகளைச் செய்தவன் என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும். இது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். தமிழ்நாடே தெரியாத பழனிசாமிக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

25 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் 50 லட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றவன் நான்.

  • ஸ்டாலின் என்ன சாதித்தார் என்று கேட்கும் முதல்வரே சென்னையில் நீங்கள் பயணிக்கும் பாலங்கள் அனைத்தையும் கட்டியது இந்த ஸ்டாலின்தான் என்பதை உங்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

நீங்கள் தலைநகர் சென்னையில் எங்கே சுற்றினாலும், நான் கட்டிய பாலங்களில் பயணம் செய்யாமல் இருக்க முடியாது. ஒன்றல்ல, ஒன்பது பெரிய பாலங்களையும், 49 குறும்பாலங்களையும் கட்டியவன் நான்.

  • மாநில அரசின் நிர்வாகத்தையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் ஒரே நேர்கோட்டில் இணைத்தவன் நான்.
  • ஒவ்வொரு நாளும் மலையெனக் குவியும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்கு கனரக வாகனங்கள், துப்புரவு எந்திரங்கள் மூலம் குப்பை அகற்றும் திட்டம்.
  • துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்திற்கு மருத்துவ நலத்திட்டம்
  • 302 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை போக்குவரத்து சாலைகள், 2023 கிலோ மீட்டருக்கு உட்புறச் சாலைகள்,
  • சென்னை முழுவதும் பேருந்து நிறுத்த நிழற்குடைகள்,
  • 81 ஓய்வுப்பூங்காக்கள்,
  • 18 சாலையோரப் பூங்காக்கள்,
  • 47 குடியிருப்புப்பகுதி விளையாட்டுத் திடல்கள்,
  • சென்னை மருத்துவமனைகள் மூலம் 83,34,076 புறநோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை
  • வருமுன் காப்போம் திட்டம் மூலம் 2,50,000 பேருக்கு நோய்தடுப்பு சிகிச்சை
  • பிரசவ காலத்தில் குழந்தைகளையும் தாயையும் காக்கும் 93 தாய் சேய் நல மருத்துவக்கூடங்கள்
  • கொத்தவால்சாவடியிலிருந்து கோயம்பேட்டிற்கு வணிகச்சந்தை மாற்றம்
  • பல கி.மீ சாலைகளுக்கு அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்கள்.

*மாநகராட்சி வரலாற்றில் முதன்முறையாக மழலையர் பள்ளிகள் தொடங்கப்பட்டன. மாநகராட்சிப் பள்ளிகள் 100 சதவிகிதத் தேர்ச்சி பெற்றன.

  • இந்தியாவிலேயே முதன்முறையாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதுபோல மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் வார்டு வளர்ச்சி நிதி வழங்கினேன்.
  • மாநகராட்சி வரலாற்றிலேயே முதன்முறையாக பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

சென்னையை சிங்காரச் சென்னையாக ஆக்கும் கனவை நனவாக்கியவன் நான். இதனை நான் சொல்லிக் கொள்வது இல்லை. ஏனென்றால், அது சென்னை மக்களுக்கே தெரியும். பயன்பெற்றவர்கள் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள். எதையுமே செய்ய முடியாத பழனிசாமி போன்றவர்கள் குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

2006 முதல் உள்ளாட்சித் துறை அமைச்சர், 2009 முதல் துணை முதலமைச்சராக இருந்த காலத்தில் செய்த சாதனைகளை இந்த ஒரு கூட்டத்திலேயே மொத்தத்தையும் சொல்லி முடிக்க இயலாது.

  • உள்ளாட்சியில் மக்களையும் இணைக்கும் வகையில் உள்ளாட்சி விழாக்கள்.
  • சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது!
  • வரலாற்றிலேயே முதன்முறையாக உள்ளாட்சித்துறைக்கு மாநில அரசின் நேரடி வருவாயிலிருந்து 31% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • இந்திய அளவில் 6310 கிராமங்களுக்கு வழங்கப்பட்ட நிர்மல் புராஸ்கர் விருதை தமிழகத்திலிருந்து மட்டும் சுமார் 1474 கிராமங்கள் அள்ளிக்குவித்தன.
  • ஊராட்சி தோறும் மின் மயானங்கள்.
  • தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரத்து 104 ஊராட்சிகளில் தனி நூலகங்கள்
  • மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டத்தை பின்தங்கிய கிராமங்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் முடுக்கிவிட்டதால், இந்தியாவிலேயே மிகச்சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு தேசிய அளவில் 6 விருதுகளை வாங்கியவன்.
  • ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 76% பெண்கள், 56% தாழ்த்தப்பட்டோர் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்திக் காட்டியதால் உச்சநீதிமன்றத்தின் பாராட்டைப் பெற்றேன்.
  • தமிழக மகளிர் மேம்பாட்டுக் கழகத்தை ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைத்தேன்.
  • தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் புதிய மகளிர் சுயஉதவிக்குழுக்களை உருவாக்கினேன். இதில் 20 லட்சம் பெண்களை இணைத்தேன். இதன் மூலமாக சுமார் 4 ஆயிரம் கோடி சுழல் நிதியை என் கரங்களால் அப்பெண்களுக்கு வழங்கினேன்!
  • மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் 2,568 கோடி வங்கி சேமிப்பு உருவாக வித்திட்டேன். அதன் மூலம் சுமார் 7000 கோடி வரை சுயஉதவிக் குழுக்களுக்குக் கடன் கிடைக்கக் காரணமாக இருந்தேன்.
  • முதல்வர் கருணாநிதியின் கனவுத்திட்டமான சமத்துவபுரங்களைக் கட்டி எழுப்பியதும் எனது துறையின் கீழ்தான். 5 ஆண்டுக்குள் 95 சமத்துவபுரங்கள் கட்டிமுடிக்கப்பட்டன.
  • தலைவர் அறிவித்த கான்கிரீட் வீடு கட்டும் திட்டமும் நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதுதான் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
  • சுமார் 15 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு மறுகட்டுமானம் செய்ய உத்தரவிட்டேன்.
  • 2,032 கோடியில் சென்னையிலும், 2,497 கோடியில் மதுரையிலும், 3,187 கோடி கோவையிலும் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம் அமைத்தவன் நான்!
  • வேலை நியமனத் தடைச் சட்டத்தை நீக்கி உள்ளாட்சித் துறையில் மட்டும் 25 ஆயிரம் புதிய பணிநியமனங்கள்!
  • வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் மூலம் 1.22 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
  • இவை அனைத்தையும் செய்து கொடுத்தவன் இந்த ஸ்டாலின்!

630 கோடியில் இராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம், 1,400 கோடியில் வேலூர் கூட்டுக்குடிநீர் திட்டம், 1,928 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், நெம்மேலியில் 533 கோடியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் – இவை அனைத்தும் எனது பெயரைச் சொல்லும்!

இந்தத் தருமபுரி மாவட்டத்தில் கேளுங்கள் எனது பெயரை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தோடு சேர்த்துச் சொல்வார்கள். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குடிநீருக்காக பல கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.

அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய குடிதண்ணீரில் ப்ளோரைடு அதிகமாக கலந்து உள்ளதால், குறிப்பாக பென்னாகரம் பாலக்கோடு தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களும் பற்களில் காரை படிவதும் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இதில் இருந்து இந்த இரண்டு மாவட்ட மக்களைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது தான் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்.

எந்த ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நான் தொடக்கி வைத்தேனோ, ஜப்பான் சென்று அடிப்படைப்பணிகளைச் செய்து கொடுத்தேனோ, சுமார் 80 சதவிகித பணிகள் முடியக் காரணமாக இருந்தேனோ, அந்த ‘ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்துங்கள்’ என்று நானே போராடும் சூழ்நிலையை ஏற்படுத்திய இரக்கமற்ற அரசுதான் இந்த அதிமுக அரசு.

மக்களின் குடிநீர்த் தேவைகளுக்காகக் கொண்டு வந்த திட்டத்தைக் கூட அரசியல் நோக்கத்தோடு முடக்கிய மிக மோசமான அரசு இந்த அரசு. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தால் இலட்சக்கணக்கான மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தியாகும் என்று கூடப் பார்க்காமல், இதனால் திமுகவுக்கு அந்தப் பெருமை போய்விடும், கருணாநிதிக்குப் புகழ் கிடைத்துவிடும், ஸ்டாலினுக்குப் பேர் கிடைத்துவிடும் என்ற குறுகிய நோக்கத்தோடு அரசியல் நடத்தும் சிறுமதியாளர்கள் கையில் கோட்டை போய்விட்டது. அதனால்தான், நாம் ‘தமிழகம் மீட்போம்’ என்று முழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

தமிழகத்தில் இன்று புதியதாக 1,714 பேருக்கு கரோனா தொற்று…

ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் – ஆய்வாளர் – பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மறைவு மு.க.ஸ்டாலின் இரங்கல்

Recent Posts