முக்கிய செய்திகள்

சென்னையிலிருந்து இலங்கை யாழ்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு விமான சேவை..

சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் விமான சேவை தொடங்கியது.

இலங்கையில் 1983ல் உள்நாட்டுப்போர் காரணமாக யாழ்ப்பாணம் பலாலி விமான தளத்திற்கு விமான சேவை நிறுத்தப்பட்டது.

2009ல் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தபின்னர் விமான தளத்தை விமான நிலையமாக புனரமைக்கும் பணிகள் நடைபெற்றன.

பலாலி விமான நிலையத்தை தரம் உயா்த்துவதற்காக மொத்தம் ரூ.225 கோடி முதலீடு செய்யப்பட்டது.

இதில் ரூ.195 கோடியை இலங்கை ஒதுக்கீடு செய்ததில், இந்தியா ரூ.30 கோடி நிதியுதவி வழங்கியது.

இப்பணிகள் முடிவடைந்த நிலையில், விமான நிலையம் 36 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது.

அத்துடன், தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து ஏர் இந்தியாவின் அலைன்சர் விமானம், யாழ்ப்பாணம் புறப்பட்டு சென்றது.

முதல்கட்டமாக, மதுரை, கோவை, திருச்சி, சென்னை, மும்பை, திருவனந்தபுரம் நகரங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் இயக்கப்பட உள்ளது.

பலாலியில் உள்ள விமான தளம், தற்போது புதுப்பிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

பலாலியானது, இலங்கையின் 5-ஆவது சா்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்படவுள்ளது. ஏற்கெனவே கொழும்பு, ரத்மலானா, மட்டக்களப்பு, அம்பந்தோட்டம் ஆகிய இடங்களில் சா்வதேச விமான நிலையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது