சென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு

ட்ராம் வண்டிகள் ஓடும் பழங்காலச் சென்னை

சென்னையும் அதன் தமிழும் என்ற தலைப்பில் சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் வரும் 17ஆம் தேதி முழுநாள் கருத்தரங்கு நடைபெற உள்ளது. 

இதில் சென்னை தொடர்பான தங்களது நினைவுகள், அனுபவங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புகளை பல்வேறு ஆளுமைகளும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், திரையுலகைச் சேர்ந்த படைப்பாளிகள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 24 பேர் இந்நிகழ்வில் உரையாற்றுகின்றனர்.

ட்ராம் வண்டிகள் ஓடும் பழங்காலச் சென்னை

முற்பகல் 11 மணிக்கு, பிற்பகல் 12.30 மணி மற்றும் 2.30 மணிக்கு என மூன்று அமர்வுகளாக நடைபெறும் இந்த கருத்தரங்கை உலக தமிழ்ப் பண்பாட்டு மையம் நடத்துகிறது.

பேசுவோர் பெயர்கள் மற்றும் தலைப்புகள் இடம்பெற்றுள்ள அழைப்பிதழ் இந்தப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியை கலை, இலக்கிய விமர்சகரான இந்திரன் ஒருங்கிணைத்து நடத்துகிறார்.

 

 

சென்னையும் அதன் தமிழும்  கலை விமர்சகர் இந்திரன் எழுதிய கட்டுரையிலிருந்து…

சென்னையின் வரலாறு பிரிட்டீஷ்காரர்களின் வருகை நிகழ்ந்த காலத்தோடு மட்டுமே தொடங்குவது அல்ல. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் சென்னை மயிலாப்பூர் கோயிலில் சிறப்பாக நடைபெறும் விழாக்களைப் பற்றி தேவாரம் இரண்டாம் திருமுறையில் “மட்டிட்ட புன்னையங் கானல் மட மயிலை” என்று தொடங்கும் பதிகத்தில் புகழ்ந்து பாடுகிறார். கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் “துறைக் கொண்ட செம்பவள இருளகற்றுஞ்சோதித் தொன்மயிலை வாயிலானடியார்க்கு மடியேன்.” என்று பாடியிருக்கிறார். இவற்றிலிருந்து இன்றைக்குத் தமிழகத்தின் தலைநகரமாக விளங்கும் சென்னை ஏழு , எட்டாம் நூற்றாண்டுகளிலேயே சிறப்பான விழாக்களைக் கொண்டாடும் அளவுக்குச் சிறப்புற்றிருந்தது என அறியலாம். திருவல்லிக்கேணி எனும் பகுதி நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் சங்க காலத்து இலக்கியமாகிய திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் சென்னை நகரத்தின் மயிலாப்பூர் பகுதியில்தான் வாழ்ந்தார் எனும்

 ட்ராம் வண்டியில் பயணம் செய்யும் பிரிட்டிஷார்

செவிவழிக் கதைகள் இந்நிலப்பகுதியின் தொன்மையை மட்டுமின்றி இதன் தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்தையும் நமக்குத் தெரிவிக்கின்றன. ஆனாலும் கூட இந்த நகரம் ஒரு மதுரை , வஞ்சி, புகார் போன்ற பழந்தமிழ் நகரங்களுக்கு இருக்கும் புராதனப் புகழ் கொண்டது அல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். 1523 இல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் மலை மீது போர்ச்சுக்கீசியர்களால் கட்டப்பட்ட உலகப் புகழ் பெற்ற தேவாலயம் பிரிட்டீஷ்காரர்கள் இங்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே போர்ச்சுக்கீசியர்கள் இப்பகுதியோடு தொடர்பில் இருந்தனர் என்பதைக் காட்டுகிறது. எனவே பிரிட்டீஷ்காரர்களுக்கு முன்னரே போர்ச்சுக்கீசியர்கள் டச்சுக்காரர்கள் ஆகியோர் இந்த கீழைக் கடற்கரைப் பகுதியில் வருகை புரிந்துள்ளனர் என அறியலாம். மேலும் பிரெஞ்சுக்காரர்களும் செப்டம்பர் 1746இல் சென்னையைக் கைவசம் வைத்திருந்த பிரிட்டீஷ்காரர்களின் மீது படையெடுத்து வந்து அவர்களை வென்று சென்னையைக் கைப்பற்றினார்கள் என்பதும் வரலாறு.

சென்னையில் முதல் கார்: அயோத்திதாச பண்டிதர் எழுதியுள்ள குறிப்பு :

அக்கினி வாயுவால் இயங்கக்கூடிய மாட்டார் கார் விலை உரூ.5000. ஆங்கில துரை மக்கள் அவ்வண்டியை நடத்துங்கால் மனுமக்களும் சீவராசிகளும் முகுதியாகவும் உலாவும் வீதிகளைல் அதி துரிதமின்றியும், அதி ஜாக்கிரதையுடனும் பெருத்த பாதைகளில் நடத்தி வருகிறார்கள்.