சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன மகோத்சவ நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் டிசம்பர் 28 ம் தேதி முதல் 31ம் தேதி வரை மார்கழி ஆருத்ரா தரிசன மகோத்சவம் நடைபெற உள்ளது. ஆனால், இந்த உற்சவத்தில் கடலூர் மாவட்டம் தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை என கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுசம்பந்தமாக கடந்த 21ம் தேதி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விஷ்ணுதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், பிற மாவட்ட பக்தர்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிப்பதற்கு பதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவியுடன் தனி மனித விலகல் நடைமுறைகளை பின்பற்றி கூட்டத்தை முறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிற மாவட்டங்களுக்கு பயணிக்க பின்பற்றப்பட்ட இ – பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாலும், ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாலும், பிற மாவட்ட மற்றும் பிற மாநில பக்தர்களுக்கு தனி மனித விலகல் உள்ளிட்ட விதிகளை பின்பற்றி ஆருத்ரா தரிசன மகோத்சவ நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனு குறித்து விளக்கம் அளிக்க அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, விசாரணையை வரும் 27 ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.