நிவாரணப் பணிக்கும் சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு? : பாஜகவிற்கு ப. சிதம்பரம் கேள்வி..

ராஜிவ் அறக்கட்டளை தொடர்பாக பாஜக., குற்றம் சாட்டி வரும் நிலையில், 2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு என முன்னாள் நிதியமைச்சரும் காங்., எம்.பி.,யுமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி, சீனா உடன் ரகசிய ஒப்பந்தம் போட்டுள்ளது என்றும் இதன் மூலம் ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நிதி வழங்கியுள்ளதாகவும் பாஜக., தலைவர் ஜேபி நட்டா குற்றம் சாட்டினார்.

மேலும், காங்., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சியின் போது, பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு பணம் திருப்பி விடப்பட்டுள்ளது எனவும் பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து முன்னாள் நிதியமைச்சரும் காங்., எம்.பி.,யுமான ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, அந்தமான் தீவுகளில் சுனாமி நிவாரணப் பணிகளுக்காகப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.20 லட்சம் பெற்றது உண்மைதான்.

ஒவ்வொரு ரூபாயும் நிவாரணப் பணிகளுக்குச் செலவழிக்கப்பட்டு கணக்கு சமர்பிக்கப்பட்டது.
இதில் என்ன தவறு? 2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு? முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பாஜக., முடிச்சு போடுகிறது! சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்பொழுது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை?. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.