46 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு?: சத்திய பிரபா சாஹூ தகவல்

46 வாக்குப்பதிவு மையங்களில் தவறுகள் நடைபெற்றிருப்பதாக எழுந்த புகார் வந்திருப்பதால், அங்கு மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப் பிரபா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.156 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ரூ. 114 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள தொகைக்கு உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரூ. 638 கோடி மதிப்புள்ள 2, 243 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ. 632 கோடி மதிப்பிலான 2256 கிலோ தங்கம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.  ரூ. 6 கோடி மதிப்பிலான தங்கம் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.

மற்ற பொருட்கள் ரூ. 18 கோடி 96 லட்சம்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தலின் போது 13 மாவட்டங்களில் உள்ள 46 வாக்குப்பதிவு மையங்களில் தவறுகள் நடந்திருப்பதாக புகார் உள்ளது. இது குறித்து கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் பதிலைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த 46 வாக்குப் பதிவு மையங்களில் மறு வாக்குப் பதிவு நடத்தப்பட வாய்ப்பிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.