தலைமை நீதிபதிக்கு எதிராக ‘போலி பாலியல் வழக்கு’ தொடர ரூ.1.50 கோடி பேரம்: வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக போலியான பாலியல் வழக்கு தொடர ரூ.1.50 கோடி பேரம் பேசப்பட்டதாக கூறிய வழக்கறிஞருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர்  , கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாகக் கூறி இரண்டு சம்பவங்களைக் குறிப்பிட்டு நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் அத்துமீறல் புகார்களை தெரிவித்துள்ளார்.

இந்தப் புகார்களை உச்ச நீதிமன்றத்தில் உள்ள  22 நீதிபதிகளுக்கும், அந்தப் பெண் பிரமாணப் பத்திரமாக அனுப்பினார். கடந்த அக்டோபரில்தான் கோகய் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து அந்தபுகார் சனிக்கிழமை உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகய், , நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் தலைமையிலான அமர்வில்  விசாரிக்கப்பட்டது.

ஆனால், நீதிபதிகள் உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை, அதேசமயம் புகாரை செய்தியாக வெளியிட்ட ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட பெண், முறைகேடு புகார் ஒன்றில் சிக்கியதையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்டவர். அதுதொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உட்சவ் சிங் ஜெயின்ஸ் என்பவர், நேற்று உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் ஒன்று தாக்கல் செய்தார். அதில் தலைமை நீதிபதியை பாலியல் குற்றச்சாட்டு கூறியவுடன் அதிர்ச்சி அடைந்தேன்.

தலைமைநீதிபதி ரஞ்சன் கோகயை சிக்கவைத்து பதவிவிலக வைப்பதற்காக சதி நடக்கிறது. என்னிடம் அஜெய் என்பவர் சமீபத்தில் அணுகி, தலைமை நீதிபதிக்கு எதிராக போலிபாக பாலியல் புகாரை பதிவு செய்ய உதவ வேண்டும்,

பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார். அதற்காக என்னிடம் ரூ.1.50 கோடி பேரம் பேசப்பட்டது. ஆனால், அதற்கு நான் மறுத்துவிட்டேன்.

தலைமை நீதிபதியை பதவியில் இருந்து இறக்குவதற்காக மிகப்பெரிய சதி நடக்கிறது. நீதிமன்றத்தின் சுதந்திரத்துக்கு பாதிப்பு வந்துள்ள நிலையில் இதுகுறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

என்னை அனுகிய அந்த மனிதர், கார்ப்பேரேட் நிறுவனங்களுக்கு நெருங்கிய தொடர்பு உடையவர், நீதிபதிகளிடம் இருந்து தீர்ப்புகளை விலை கொடுத்து வாங்கும் சக்தி கொண்டவர்.

ஒரு முக்கிய வழக்கில் தலைமை நீதிபதியிடம் இருந்து தனக்கு சாதகமாக ஒரு தீர்ப்பு பெறுவதற்காக அனுகியபோது அதில் தோல்வி அடைந்துள்ளார்,

அந்த வழக்கையும் வேறுஅமர்வுக்கு மாற்றுவதிலும் தோல்வியடைந்துள்ளார். அந்த வலிமையான கார்ப்பரேட் மனிதர், போலியாக குற்றச்சாட்டை தலைமைநீதிபதி மீது பதிவு செய்து அவருக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி பதவியில் இருந்து விலக சதி செய்துள்ளார் என்று தெரிவித்திருந்தார்.

இந்த அமர்வு நீதிபதிகள் அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஆர்.எப். நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ராஜீவ் தவான், அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆகியோர் ஆஜராகினார்கள்.

அப்போது, நீதிபதி மிஸ்ரா, நாரிமன்  ” எங்கே இருக்கிறார் உட்சவ் சிங் பெய்ன்ஸ், அவரை கூப்பிடுங்கள்” என்று உத்தரவிட்டனர். ஆனால், அந்த நேரத்தில் உட்சவ் பெயின்ஸ் நீதிமன்றத்தில் இல்லை.

நாளை(24-ம் தேதி) காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் எங்கள் முன் அந்த வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் ஆஜராக வேண்டும். என்று நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.