பிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேசப் பயணத்திற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலை ஒட்டி பல மாநிலங்களுக்கும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டும் வரும், பிரதமர் மோடி, அருணாசலப் பிரதேசத்திற்கும் அண்மையில் சென்றிருந்தார். அங்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு திட்டங்களையும் அவர் அறிவித்தார். இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை தெரிவித்திருப்பதாவது:
அருணாசலப்பிரதேசப் பகுதியில் இருநாட்டு உறவுகளைப் பாதிக்கும் எத்தகைய நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளக் கூடாது. இந்த விவகாரத்தில் சீனாவின் விருப்பம் மற்றும் கருத்துகளுக்கு இந்தியா மதிப்பளிக்க வேண்டும். இருதரப்பு உறவும் மேம்பட்டு வரும் நிலையில் அதில் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது. பரஸ்பர உறவை சிக்கலாக்கும் செயல்களில் ஈடுபடுவதை இந்தியா தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அருணாசலப்பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதியில் 1962 முதலே இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே கடும் சர்ச்சை நிலவி வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியா, சீனா, பூட்டானுக்கு இடையிலான, அருணாசலப் பிரதேசத்தை உள்ளடக்கிய டோக்லாம் எல்லைப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டு பின்னர் தணிந்தது. இந்நிலையில், அருணாசலப்பிரதேசத்திற்கு பிரதமர் மோடி சென்றிருப்பதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.