முக்கிய செய்திகள்

சீனாவின் ‘நிரந்தர’ அதிபராகிறார் ஜி ஜின்பிங்: கட்டுப்பாடுகளை நீக்கியது நாடாளுமன்றம்..


சீனா அதிபர் ஜி ஜின்பிங் தொடர்ந்து பதவியில் நீடிக்க வகை செய்யும் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் 2023ம் ஆண்டுக்கு பிறகும் அவர் தொடர்ந்து அதிபர் பதவியில் நீடிக்க முடியும்.

சீனாவில் அதிபர், துணை அதிபர் பதவிகளில் ஒருவர் 2 முறை மட்டுமே இருக்க வேண்டும். இரண்டு முறைக்கு மேல் அதிபராக முடியாது என்று சீன அரசியல் சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டை நீக்க ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்தது.

தற்போது சீன அதிபரராகவுள்ள ஜி ஜின்பிங் (64) கடந்த 2013-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரே ஆளும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகவும் அதிபராகவும் பதவி வகிக்கிறார். செல்வாக்குமிக்கவர் என்று அவரை ஆளும் கட்சினரே அறிவித்துள்ளனர்.

ஜி ஜின்பிங்கின் பதவி காலம் (2-வது முறை) வரும் 2023-ம் ஆண்டு முடிவடைகிறது. அதன்பின் அவர் அதிபர் பதவி வகிக்க முடியாது. மன்னராட்சியில் உள்ளது போல், கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் காலவரையின்றித் தானே அதிபர் பதவி வகிக்க ஜி ஜின்பிங் முடிவெடுத்தார். அதற்கேற்ப அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவும் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில் அதிபர் பதவியில் ஜி ஜின்பிங் தொடர்ந்து நீடிக்கும் வகையில், இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற தீர்மானத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று ரத்து செய்தது. இதுதொடர்பான தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது, மொத்தமுள்ள 3,000 பேரில் 2958 பேர் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் மூலம் அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வகை செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.