கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து செமி ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை நியூசிலாந்து அரசு தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிகளில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். இதில் 50 பேர் பலியாகினர். இதில் 7 பேர் இந்தியர்கள்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முக்கியக் குற்றவாளியான பிரெண்டன் டாரன்ட் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. உலகையே இந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில்கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூட்டில் கொலையாளி பயன்படுத்திய செமி ஆட்டோமெட்டிக் துப்பாக்கி மற்றும் ரைபில் ரக துப்பாக்கிகளை கடுமையான துப்பாக்கிகளுக்கான விதிகளுக்கு கீழ் கொண்டு வந்து தடை செய்வதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜேசிந்தார் ஹார்டன் கூறும்போது, “ கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூடு ஆறு நாட்கள் கடந்த நிலையில் நியூசிலாந்தில் செமி ஆட்டோமெட்டிக் மற்றும் ரைபல் ரக துப்பாக்கிகளை தடை செய்வதாக அறிவிகிறோம்.
மார்ச் 15 ஆம் தேதி நமது வரலாற்றையே மாற்றி அமைத்திருக்கிறது. இனி நமது துப்பாக்கி சட்டங்கள் நாட்டை பாதுகாக்கும் என்பதை நியூசிலாந்து மக்கள் சார்பாக அறிவிக்கிறேன்” என்றார்.
இந்த நிலையில் புதிய துப்பாக்கி சட்டங்கள் ஏப்ரல் 11-ம் தேதி அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜேசிந்தார் தெரிவித்தார்.