முக்கிய செய்திகள்

சித்திரை திருவிழா : மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் ..


சித்திரைத் திருவிழா தொடங்கியுள்ள மதுரையில், நாளைய தினம் ஆட்சி மாற்றம் நடைபெற உள்ளது. ஆம், மதுரை மக்களைக் காத்துவரும் மீனாட்சியம்மனே மதுரை நகரை ஆட்சி செய்யவுள்ளார். அதற்கான அதிகாரபூர்வ நிகழ்ச்சியாக அம்மனுக்கு இன்று இரவு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரைத் திருவிழா வெகு சிறப்பாக நடந்துவருகிறது. தினம் ஒரு நிகழ்ச்சி என்று மதுரை மாவட்ட மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிவருகிறார்கள். வரும் 30-ம் தேதி, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியோடு சித்திரைத் திருவிழா முடிவடையும். அனைத்து ஊர்களிலும் சித்திரையைக் கொண்டாடினாலும் மதுரை சித்திரைத் திருவிழாவுக்கு என்று தனி சிறப்பு உண்டு.

இந்த நிலையில், வரும் 27-ம் தேதி மீனாட்சி-சொக்கநாதருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதற்குமுன், நாளைய தினம் மீனாட்சியம்மனுக்கு ஆறுகால் பீடத்தில் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக, அம்மன் சந்நிதியிலும் பட்டாபிஷேக மண்டபத்திலும் மலர்களால் அலங்கரிப்பட்டுவருகிறது.  இன்றைய தினம் பட்டாபிஷேகம் முடிந்தவுடன், கோயில் தக்கார் மீனாட்சியம்மனிடமிருந்து செங்கோலைப் பெற்று, கோயிலின் பிராகாரங்களைச் சுற்றிவந்து, மீண்டும் அம்மனிடம் ஒப்படைப்பார். இதன்மூலம், மதுரையில் நான்கு மாதங்களுக்கு மீனாட்சியின் ஆட்சி தொடங்கியுள்ளதாக மக்கள் நம்பிவருகிறார்கள். இதுபோன்று, கடவுளே ஒரு நகரை நிர்வாகம் செய்வதுபோன்ற நிகழ்வு வேறு எங்கும் நடப்பதில்லை. மதுரையில் மட்டும்தான் இதைக் காண முடியும்.

இரவு 7.35 மணிக்கு மேல் 7.59 மணிக்குள் அருள்மிகு மீனாட்சிக்கு அம்மன் சன்னதி 6 கால் பீடத்தில் வைத்து பட்டாபிசேகம் நடக்கிறது. அப்போது அம்மனுக்கு கிரீடம் சூட்டி, செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.