முக்கிய செய்திகள்

சித்திரை திருவிழா வைகையாற்றில் மக்கள் வெள்ளத்தில் இறங்கினார் ‘கள்ளழகர்’..

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று காலை, 5:48 மணிக்கு, தங்க குதிரை வாகனத்தில், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளினார்.

அவரை வீரரராகவ பெருமாள் வரவேற்றார். இலட்சக்கணக்கான மக்கள், வைகை ஆற்றில் குழுமியுள்ளனர். இவர்களின் பாதுகாப்பிற்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அழகர் கோவிலிலிருந்து புறப்பட்ட கள்ளழகர், நேற்றிரவு, 9:30 மணிக்கு, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில், தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

இன்று அதிகாலை, தல்லாகுளம் கருப்பண சுவாமி கோவிலில் வெட்டிவேர், ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து புறப்பட்ட அழகர், பக்தர்கள் புடைசூழ, ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷம் முழங்க, காலை, 5:45 – 6:15 மணிக்குள், வைகை ஆற்றில் இறங்கினார்.

அங்கிருந்து, காலை, 7:25 மணிக்கு புறப்படும் அழகர், மதியம், 12:00 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். இரவு, 11:00 மணிக்கு, வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு செல்கிறார்.

நாளை காலை, 11:00 மணிக்கு, சேஷ வாகனத்தில் புறப்படும் அழகர், தேனுார் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். மே, 4, காலை, 9:30 மணிக்கு, அழகர் கோவில் செல்கிறார்.