முக்கிய செய்திகள்

சித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் விருந்து ஏற்பாட்டுக்கு மலைபோல் குவிந்த காய்கறிகள்..

நாளை நடைபெறும் மதுரை மீனாட்சி திருக்கல்யாணத் திருவிழாவை முன்னிட்டு, இன்றே திருக்கல்யாண விருந்து ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன.

தமிழகத்தின் ஏன் இந்தியாவில் கூட சித்திரை திருவிழா போல் பெரிய திருவிழா இல்லை எனலாம். சைவமும், வைணவமும் சேர்ந்து கொண்டாடும் ஒரே திருவிழா சித்திரை திருவிழா. இப்படி புகழ் பெற்ற திருவிழாவான மதுரை சித்திரைத் திருவிழா, கடந்த (ஏப்ரல்) 17-ம் தேதி முதல் நடந்து வருகிறது. விழாவின் எட்டாம் நாளான நேற்று, மீனாட்சி  பட்டாபிஷேகம் நடைபெற்றது. அதாவது, மதுரையின் அரசியாக மீனாட்சி முடிசூடிக்கொண்டார். விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நாளை காலை 9.05 மணிக்கு மேல் 9.29 மணிக்குள் நடைபெறுகிறது.

மதுரை இப்போதும் பாண்டிய மன்னர்களின் ஆளுகையின்கீழ் இருந்து, அந்த மன்னரின் மகளுக்கு மிகப்பிரமாண்டமாய் திருமணம் நடந்தால் எப்படியிருக்கும்? அப்படியிருக்கும் இந்த விழா.

மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு ஆடி வீதி, மேல ஆடி வீதி சந்திப்பில் பிரமாண்டமான மணமேடை அமைக்கப்பட்டு, வெட்டிவேர் பந்தல் போட்டு, கோடிக்கணக்கான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தயாராகிக் கொண்டிருக்கிறது மணமேடை. மாசி வீதிகளை வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்துவிட்டு, பெண்ணும் மாப்பிள்ளையும் மண மேடையேறுவார்கள்.

வேத மந்திரங்கள் ஓத, பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிப்பார் சுந்தரேஸ்வரர். அப்போது பெரும்பாலான பெண்கள், தங்கள் கழுத்தில் உள்ள தாலியை மாற்றி புதுத்தாலி அணிந்துகொள்வார்கள்.

 

திருமணத்தைத் தொடர்ந்து திருமண வரவேற்பு நடைபெறும் அல்லவா? அதைப்போலவே பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். மாலையில் மாப்பிள்ளை யானை வாகனத்திலும், புதுப்பெண் மீனாட்சி பூப்பல்லக்கிலும் வீதி உலா வருவார்கள். அவர்களின் அழகைக் காண நகரே திரண்டு நிற்கும்.

விருந்து

இந்த நிகழ்ச்சியையொட்டி மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருக்கல்யாண விருந்தும் நடைபெறுகிறது. இதற்கான அரிசி, காய்கறிகள் முதல் கடுகு வரையிலான அத்தனை பொருட்களையும் மதுரை மக்கள் உபயமாக அளித்துக் கொண்டிருக்கின்றனர். டன் கணக்கில் குவிந்துள்ள காய்கறிகளை நறுக்கித் தருவதற்காக, பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து அரிவாள் மனை, கத்தியுடன் வந்து இன்று காலை முதலே காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு புறம் இன்று நடைபெறும் மாப்பிள்ளை அழைப்பு விருந்துக்கான சமையல் தீவிரமாக நடந்து வருகிறது. சாம்பார் சாதம், சர்க்கரைப் பொங்கல், கேசரி, வாழைக்காய் பஜ்ஜி போன்றவை தயாராகிவருகின்றன.

நாளை சுமார் 1 லட்சம் பேருக்கு திருக்கல்யாண விருந்து நடைபெறும் என்பதால், சமையல் செய்வதற்கு மட்டுமே சுமார் 100 பேர் தன்னார்வலர்களாக வந்துள்ளனர்.சமையல் நடைபெறும் இடத்தைப் பார்க்கப் பார்க்க அரண்மனை சமையலறைக்குள் போனது போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த விருந்தை நடத்துவது கோயில் நிர்வாகமல்ல, பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை. விருந்து சாப்பிட்ட கையோடு, திருக்கோயில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மொய்ப்பந்தலில், திருக்கல்யாண மொய் எழுதி, பிரசாதம் பெற்றுக்கொள்ளும் வசதியும் உண்டு. பிரசாதப் பையில் குங்குமமும், புதுத்தாலியும் கொடுப்பார்கள்.

திருக்கல்யாணத்துக்கு மறுநாள் மீனாட்சி கோயில் தேரோட்டமும், 30-ம் தேதி காலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் நடைபெறுகிறது.