குடியுரிமை திருத்த மசோதாவை அதிமுக ஆதரித்து இலங்கைத் தமிழர்கள், சிறுபான்மை மக்களுக்கு மாபெரும் துரோகம் செய்துள்ளது.
தமிழன விரோதமாகச் செயல்படும் அதிமுகவைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் டிச.17 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை.
“அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான மதச்சார்பின்மை, சம உரிமை, சகோதரத்துவம், சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் தகர்த்துள்ள மத்திய பாஜக அரசுக்கு,
துணை நின்று சிறுபான்மையினர், ஈழத் தமிழர்களுக்கு அதிமுக அரசு மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளது.
மாநிலங்களவையில் அதிமுக அளித்த ஆதரவு, இந்த தமிழர் விரோதக் குடியுரிமை மசோதா, வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது.
மத்திய பாஜக அரசின் சிறுபான்மை விரோத, தமிழர் விரோதச் செயல்கள் அனைத்திற்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் தமிழின விரோத அதிமுக அரசைக் கண்டித்து திமுக சார்பில்
டிசம்பர் -17 செவ்வாய்க்கிழமை அன்று மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் மாவட்டந்தோறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, நகரப் பகுதி, ஊராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள், துணை அமைப்புகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அனைவரும் பெருமளவில் கலந்துகொண்டு வெற்றிபெறச் செய்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.