தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. இந்நிகழ்ச்சில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது.
17 மாநகராட்சிகள், 110 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்தன. அதேபோல புதிதாக தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகள், மாநகராட்சிகளில் வார்டுகளின் எண்ணிக்கையை நிர்ணயித்து அவற்றின் எல்லைகளை வரையறை செய்வது தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. பட்டியல் வெளியீட்டு நிகழ்சில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டாலும், புதிதாக பட்டியலில் பெயர் சேர்க்கவோ அல்லது திருத்தும் மேற்கொள்ளவோ கால அவகாசம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது