எம்ஜிஆர் பெயரைச் சொல்லியே நூறு ஆண்டுகள் ஆட்சி நடத்துவோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

 

எம்ஜிஆர் பெயரைச் சொல்லியே நூறாண்டுகள் ஆட்சி நடத்துவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலரும் பங்கேற்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திரளான தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர். மாலையில் விழா தொடங்கியதும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பு மலர், மற்றும் தபால் தலை வெளியிடப்பட்டது.

விழாவில் உரையாற்றிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இலங்கை இனப்படுகொலையை அப்போதைய மத்திய அரசும், அதன் கூட்டணியில் இருந்த திமுகவும் தடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தில் 100 கோடி ரூபாய் செலவில் நிரந்தர வெள்ளத்தடுப்பு திட்ட பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டத்துக்கு செல்லக்கூடிய வகையில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

சென்னை, காஞ்சிபுரம் திருவ்வள்ளூர் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 28 நீர்நிலைகள் 6 கோடி ரூபாய் செலவில் குடிமராமத்துப் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. அதிமுக மக்களுக்காக உருவான கட்சி. மக்களுக்காக தியாகம் செய்யும் கட்சி. இந்த இயக்கத்தை நூறு ஆண்டுகளானாலும் அசைக்க முடியாது. எம்.ஜி.ஆர் என்ற பெயரே எங்களுக்கு மந்திர சொல். அந்த மந்திர சொல்லை வைத்தே நூறு ஆண்டுகள் ஆட்சி புரிவோம். ஆங்கிலேயர்களுக்கு பிறகு ஜார்ஜ் கோட்டையை அதிக ஆண்டுகள் ஆண்ட கட்சி அதிமுக தான். இனி ஆளப்போவதும் அதிமுக தான். அம்மா ஆட்சியின் சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்கட்சியினர் இந்த விழாவுக்கு எதிராக சதி செய்தார்கள். சதி, சூழ்ச்சிகளை கடந்து இந்த விழா இன்று நடைப்பெற்றுள்ளது.

10,884 கோடி ரூபாய் அளவுக்கு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மூலம் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 547 அறிவிப்புகளில் 434 அறிவிப்புகளுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 321 திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 21திட்டங்கள்  மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன. 84 அறிவிப்புகள் விரைவில் திட்டம் தயாரிக்கப்படும். இது ஆடம்பர விழா அல்ல. மக்கள் நலனுக்கான விழாவாகும்.

நல்லாட்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் நூற்றாண்டு விழா தொடர்பாக அவதூறுகளை பரப்பி நிறுத்த பார்த்தனர்  ஆனால் அதிலும் அவர்கள் தோற்றுதான் போனார்கள்

அறிவிக்கப்பட்ட அத்தனை திட்டங்களும் நடைமுறை படுத்தி கொண்டிருக்கிறோம் என எதிர்கட்சி தலைவருக்கு கூறிக்கொள்கிறேன்.

அம்மா அரசின் துடிப்பான செயல்பாட்டுக்காக தேசிய அளவில் பல விருதுகள் கிடைத்துள்ளன.

செயல்படாத அரசாக இருந்தால் இதுபோன்ற விருதுகளை பெறமுடியுமா? திமுக ஆட்சியில் என்ன திட்டங்களை கொண்டு வந்தார்கள். அவர்களால் எந்த நலனை மக்கள் அனுபவித்தார்கள். திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தை தான் அனுபவித்தார்கள்.தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.  ஒரு எதிர்க்கட்சி தலைவார் எப்படி பண்போடு நடக்க வேண்டும் என்பது கூட தெரியாதவர் ஸ்டாலின்.

ஆட்சியின் மீது எத்தனை பழி சுமத்தினாலும் மக்கள் எங்கள் மீதg நம்பிக்கை வைத்துள்ளார்கள். மக்களுக்காக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மக்கள்.நிம்மதியாக உள்ளார்கள். இந்த இயக்கத்தை அழிக்க ஆட்சியை கலைக்க எவ்வளவோ முயன்று வருகிறார்கள். நாங்கள் அம்மா என்ற தெய்வ சக்தியோடு இருக்கிறோம். எங்களை ஒன்றும் செய்ய முடியாது.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை பெற்றதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்.பெயர் சூட்டப்படும். சென்னை டி.எல்.எப் முதல் பூவிருந்தவல்லி வரையிலான சாலைக்கு எம்.ஜி.ஆர்.பெயர் சூட்டப்படும்.

இவ்வாறு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.

CM Edappadi Palanisamy Speech in MGR 100th year function

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சந்திப்பு..

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

Recent Posts