காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு: பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

காவிரியின் குறுக்கே மேகதாதில் கர்நாடகம் அணைகட்ட எதிர்ப்புத் தெரிவித்துப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து பிரதமருக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மேகதாதில் அணை கட்டி குடிநீருக்கும்,  மின்னுற்பத்திக்கும் பயன்படுத்துவது பற்றிய சாத்தியக் கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்துக்குக் கர்நாடக அரசு அனுப்பியிருப்பது ஒருசார்பான நடவடிக்கை ஆகும்.

இது காவிரி நீரைப் பகிர்ந்து கொள்ள நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்பை மீறும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேகதாதில் அணை கட்டினால் ஆற்றின் இயற்கை நீரோட்டத்தைப் பாதித்து, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் செயல்படுத்த முடியாமல் போகும். 

கூட்டாட்சி முறையில் வடிநிலத்தின் மேற்பகுதியில் இருக்கும் மாநிலம் கீழ்ப்பகுதியில் இருக்கும் மாநிலத்தின் ஒப்புதலைப் பெறாமல் ஆற்றின் நீரோட்டத்தைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.

கர்நாடக அரசு மேகதாது திட்டத்துக்காகத் தமிழகத்தை அணுகாமல் நேரடியாக மத்திய நீர்வள ஆணையத்தை அணுகியிருப்பது அரசின் வழிகாட்டுதல்களை மீறிய செயலாகும்.

கர்நாடகத்தின் ஒருசார்பான இந்த நடவடிக்கை, தமிழகத்தில் காவிரியாற்றைச் சார்ந்து வாழும் இலட்சக்கணக்கான உழவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. வடிநிலப் பகுதிகளில் உள்ள மாநிலங்களின் ஒப்புதலைப் பெறாமல், கர்நாடக அரசு அளித்துள்ள சாத்தியக் கூறு அறிக்கை மீது மேல்நடவடிக்கை எடுப்பதை நிறுத்துமாறு மத்திய நீர்வள ஆணையத்துக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதில் தெரிவித்துள்ளார்.

CM EPS writes a letter to PM Modi on megathathu dam Issue