தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் 2013 நடைபெற்றது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தலைவர், துணைத் தலைவர் ஆகியோரின் ஐந்தாண்டுப் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி 18ஆயிரத்து 775 கூட்டுறவுச் சங்கங்களுக்கும் தேர்தலை நடத்தக் கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்தச் சங்கங்கள் கூட்டுறவு, பால்வளத்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட 15அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. முதலில் 18ஆயிரத்து 435 தொடக்கக் கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஏப்ரல் 2, 7, 16, 23 ஆகிய தேதிகளில் 4கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை முறையே ஒவ்வொரு கட்டத்துக்கும் ஏப்ரல் 3, 9, 17, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இதற்கான அறிவிப்பை மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் மார்ச் 12ஆம் தேதி முதல் வெளியிட உள்ளனர். இந்தத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறையே ஏப்ரல் 7, 13, 21, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்த அறிவிப்பைக் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையர் இராசேந்திரன் வெளியிட்டுள்ளார்.