சென்னை எண்ணூரில் உள்ள சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டக் கூடாது என, வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, எண்ணூர் பகுதியில் அமைந்துள்ள வல்லூர் அனல் மின் நிலையம், மத்திய அரசின் விதிகளை மீறி, நிலக்கரி சாம்பலை, எண்ணூர் சதுப்பு நில பகுதிகளில் கொட்டி வருவதாகவும்,
அதற்கு தடை விதிக்கவேண்டும் எனவும், அப்பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு, மத்திய அரசின் அறிக்கையின்படி, வல்லூர் அனல் மின் நிலையம் விதிகளை பின்பற்றாமல்,
சுற்றுச்சூழலுக்கும், சுகாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளது என கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், எண்ணூர் சதுப்பு நில பகுதியில் நிலக்கரி சாம்பலை கொட்டுவதற்கு வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு தடை விதித்தும் உத்தரவிட்டனர்.
மேலும், வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு மத்திய அரசு அளித்த அனுமதி, 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்து விட்டதாகவும்,
அனுமதியை புதுப்பிக்க கோரி அளித்த விண்ணப்பம் நிலுவையில் இருக்கும் நிலையிலும் அனல் மின் நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் நீதிபதிகள் தங்கள் இடைக்கால உத்தரவில் சுட்டிக் காட்டியுள்ளனர்.