முக்கிய செய்திகள்

கூட்டணி தர்மத்துக்காக குடியுரிமைச் சட்டத்திருத்ததை ஆதரித்துதான் ஆகவேண்டும் : ராமதாஸ்

கூட்டணி தர்மத்துக்காக குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதவை ஆதரித்து ஆகவேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் 311 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.

மக்களவையில் பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை உள்ளநிலையில், குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படும் என்பது உறுதியாக தெரிந்த ஒன்று.

ஆனால், மாநிலங்களவையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் அந்த மசோதாவை நிறைவேற்ற முடியாத சூழல் பா.ஜ.கவுக்கு இருந்தது.

அந்தநிலையில், மாநிலங்களவையில் 125 எம்.பிக்களின் ஆதரவுடன் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.

அ.தி.மு.க, பிஜி ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சி எம்.பிக்களின் ஆதரவுடன்தான் மசோதா நிறைவேறியது.

மாநிலங்களவையில் அ.தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பியாக அன்புமணி ராமதாஸ் உள்ளார்.

இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ‘அன்புமணி ராமதாசுக்கு மத்திய அமைச்சர் பதவிகொடுத்தாலும் வாங்க மாட்டோம்.

கூட்டணி தர்மத்திற்காக குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை ஆதாரித்துதான் ஆக வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும்.அங்கீகரிக்க வேண்டும் என்பது பா ம.கவின் நிலைப்பாடு.

நாங்கள் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவளித்தது ஈழத்தமிழர்களுக்கு எதிரான வாக்கு இல்லை’ என்று தெரிவித்தார்