1989-ல் ஒரே நேரத்தில் இருவரும் எம்.எல்.ஏ. ஆனோம். நான் உழைத்து மேலே வந்தேன்.
நீங்கள் அப்பாவின் தயவால் கொல்லைப் புறமாக வந்து தலைவர் ஆனீர்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கிப் பேசினார்.
சேலத்தில் திமுக- காங்கிரஸைக் கண்டித்து நடத்தப்பட்ட கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
”ஸ்டாலின் நம்மைப் பார்த்து பேடி என்கிறார். நீங்கள் வந்த விதம் வேறு, நான் வந்த விதம் வேறு. உங்கள் அப்பா தலைவராக இருந்தார், திமுக தலைவராக இருந்தார், முதல்வராக இருந்தார்,
நீங்கள் அழகாக சீட் வாங்கிக் கொண்டு வந்து சட்டப்பேரவை உறுப்பினர் ஆனீர்கள்.
இந்த இடத்திற்கு வருவது எவ்வளவு கஷ்டம் என்பது உழைக்கின்றவர்களுக்குத் தான் தெரியும்.
உங்களுக்கு எப்படி தெரியும். உங்கள் அப்பா கருணாநிதி, அவருடைய போர்வையில் நீங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனீர்கள். அவருடைய போர்வையில் செயல் தலைவர் ஆனீர்கள். அதே போல திமுக தலைவர் ஆகியிருக்கிறீர்கள்.
நாங்கள் அப்படியல்ல. சாதாரண கிளைச் செயலாளர், ஒன்றியப் பொறுப்பு, மாவட்டப் பொறுப்பு, தலைமைப் பொறுப்பு, அப்படியென்று ஒவ்வொரு அடுக்கடுக்காக, ஒவ்வொரு முறையும் உழைத்து, உழைத்து கட்சிக்கும், நம் ஆட்சிக்கும், தலைமைக்கும் விசுவாசமாய் இருந்து,
விசுவாசத்திற்குக் கிடைத்த பரிசு இந்தப் பரிசு. ஆகவே, நீங்கள் எங்களைப் பார்த்து பொறாமை பட்டு பிரயோஜனம் இல்லை.
நீங்கள் 1989-ல் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனீர்கள். நானும் 1989-ல் தான் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனேன். நீங்கள் உங்கள் அப்பா வழியில் வந்தீர்கள்.
நான் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்து உழைத்து, அந்த உழைப்பால் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனேன்.
ஆகவே, நீங்கள் எங்களைப் பார்த்து கொல்லைப் புறமாக வந்தேன் என்று சொல்கிறீர்களே, நீங்கள் கொல்லைப்புற வழியாக வந்தீர்களா? நான் கொல்லைப்புற வழியாக வந்தேனா?
அப்பன் சம்பாதித்து வைத்ததை மகன் செலவு செய்வது எள். ஆனால் மகனே சம்பாதித்து அந்த செல்வத்தைச் சேர்ப்பது தான் கடினம்.
எங்களைப் பொறுத்தவரைக்கும் நாங்களே உழைத்து, பதவிக்கு வந்து இன்றைக்கு இந்த நிலையில் இருக்கிறோம். நீங்கள் அப்படியில்லை. நீங்கள்தான் கொல்லைப்புறத்து வழியாக வந்திருக்கிறீர்கள்.
உங்கள் அப்பா திமுக தலைவராக இருந்தார், திமுக அரசினுடைய முதல்வராக இருந்தார், அதனால் நீங்கள் எம்.எல்.ஏ. ஆனீர்களேயொழிய உங்களுடைய செல்வாக்கினால் வரவில்லை.
ஆகவே, முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எங்களைப் பொறுத்தவரைக்கும் ஜெயலலிதாவிடத்திலும், எம்ஜிஆரிடத்திலும் நன்மதிப்பைப் பெற்று, விசுவாசமாக இருந்து,
இரவு பகல் பாராமல் கட்சிக்கு உழைத்து, மக்களுக்கு உழைத்து, அதன் மூலம் கிடைக்கப் பெற்ற செல்வாக்கு தான் என்பதைப் பதிய வைக்க விரும்புகிறேன்.
நாங்கள் எல்லாம் பேடி இல்லை, எதற்கு பேடி என்றால், மக்களுக்கு என்று பயப்படுவோம். ஏனென்றால், மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்று நினைக்கிறோம்.
ஏதாவது செய்ய முடியவில்லை என்றால் மக்கள் என்னவாவது நினைத்துக் கொள்வார்களே, அதற்கு பயப்படுவோம்.
நீங்கள் என்னென்னவோ முயற்சி செய்து பார்த்தீர்கள், கட்சியை உடைக்கப் பார்த்தீர்கள், உடைக்க முடிந்ததா? ஒரு தொண்டனையாவது உங்களால் இழுக்க முடிந்ததா? சொல்லுங்கள் பார்க்கலாம், முடியாது.
திமுகவில் அத்தனையும் குடும்பம். எத்தனை பேரன், பேத்தி, பிள்ளைகள். கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின். அவருக்குப் பின்னால் உதயநிதி லைனில் வந்துவிட்டார்.
திமுகவில் அவர் பெயர் எழுதியவர்தான் வர முடியும். இதற்கு முன்பு இருந்தவர் போய்ச் சேர்ந்துவிட்டார்.
ஆகவே அதிமுகவைப் பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியும் ஸ்டாலினுக்கு இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்கின்றேன்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.