முக்கிய செய்திகள்

அடுத்த 4 நாட்களில் கடலோர மாவட்டங்களில் மழை: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..


வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பதிவு செய்துள்ளார்.

மழை குறித்த முக்கிய அறிவிப்பு தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் இருந்து:

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள வலு இழந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஆங்காங்கே சிறிய அளவிலான மழை இருக்கும். புள்ளியியல் ரீதியாக, வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்துவிட்டது என நான் கூறியிருந்தது நினைவில் இருக்கிறதா?. ஆனால், கிழக்கில் இருந்து வீசும் காற்று இன்னும் தொடர்கிறது, ஆனால், இந்த மழை வடகிழக்கு பருவமழை என்று உறுதியாகக் கூறிவிட முடியாது. ஆனால், அதன் போக்கு ஒரே மாதிரியாகவே இருக்கிறது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை என்பது வலுவானது அல்ல. நீங்கள் செயற்கைக்கோள் படத்தை காலையில் பார்த்தால் புரிந்திருந்திருக்கும், தமிழகத்தில் மழைமேகங்கள் கடற்கரைப் பகுதியை விட்டு விலகி இருப்பதை பார்க்கலாம். இப்போது முழுமையாக சென்றுவிட்டது.

தென் தமிழக கடற்கரைப்பகுதியில் நாளை மேகக்கூட்டங்கள் மீண்டும் வரும். கிழக்கில் இருந்து வீசும் காற்று காரணமாக தென் தமிழகத்தில் 11 மற்றும் 12-ந் தேதி வரைகூட மழையை எதிர்பார்க்கலாம். ஆதலால், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த வலுகுறைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால், டெல்டா மற்றும் தென் தமிழகத்தின் மாவட்டங்கள் அதிக மழையை பெறும். டெல்டா மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி வரையிலான கடற்கரைப்பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

அடுத்த 2 நாட்களில் இந்த குறைந்தகாற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து மன்னார் வளைகுடா பகுதிக்கு செல்லும். டெல்டா மண்டலம், கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 9 மற்றும் 10 தேதிகளில் மிதமான மழை இருக்கும்.

தூத்துக்குடி, மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒன்று அல்லது 2 முறை கனமழைக்கு வாய்ப்பு உண்டு. கன்னியாகுமரி மாவட்டத்தில் மிதமான மழை ஒருநாள் பெய்யலாம். அந்த மாவட்டத்தைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்யும். 9-ம் தேதி முதல் 12-ம் தேதிவரை மழை இருக்கும்.

டெல்டா மற்றும் கடலூர் மாவட்ட விவசாயிகளைப் பொருத்தவரை இந்த மழை அவர்களை பெருமளவு பாதிக்காது. அறுவடை நேரத்தில் இருக்கும் பயிர்களையும் பெரிதாக பாதிக்காது.

சென்னை மற்றும் வட தமிழ்நாடு பற்றிய நிலை, சென்னை மற்றும் வடதமிழக மாவட்ட மக்கள் மழை குறித்து பெரிய அளவில் நம்பிக்கை ஏதும் வைக்க வேண்டாம். வழக்கமான, இயல்பாகவே பெய்யும். அடுத்த 2 நாட்களுக்கு ரெயின்கோட், குடை எடுத்துக்கொண்டு வெளியே செல்லுங்கள். ஏனென்றால், சென்னையைப் பொருத்தவரை ஒரு இடத்தில் மழை பெய்தாலும், மற்ற பகுதியில் மழை இருக்காது.

அடுத்த சில நாட்களுக்கு குளிர்ந்த இரவு இருக்காது அடுத்த சில நாட்களுக்கு மழை மேகக்கூட்டங்கள் நகர்வதால், இரவில் அதிகமான அளவுக்கு குளிர் இருக்காது.

இவ்வாறு அவர் முகநூலில் பதிவு செய்துள்ளார்.