ஜனரஞ்சக நாயகர்கள் விஜய் சேதுபதியிடம் கற்றுக் கொள்ள வேண்டும்: கவிஞர் ரவிசுப்பிரமணியன்

இன்று குடும்பத்தோடு சென்று “மேற்குத் தொடர்ச்சி மலை” படம் பார்த்தேன். பலரும் அறிந்திராத மலைப்பகுதி மக்களின் அசலான வாழ்வை கண்முன்னால் நிறுத்தியிருந்தார்கள். இயற்கை சூழ்ந்த வாழ்வு, வலி, அரசியல், அரிய மனிதர்களின் பெருந்தன்மை, அற்ப மனிதர்களின் சின்ன புத்தி எல்லாம் படத்தில் வெளிப்படுகிறது. எல்லா தொழில் நுட்ப கலைஞர்களுமே தத்தம் துறைகளில் கணிசமான பங்களிப்பை செய்துள்ளனர். படம் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. நண்பர்கள் அதிக அளவில் சென்று பார்த்து அதை வெற்றியடைய வைக்க வேண்டும். ஒன்று தோணிற்று. கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நம் ஜனரஞ்சக கதாநாயகர்கள் தாங்கள் செய்யும் பல காரியங்களுக்கு பரிகாரமாக விஜய் சேதுபதி போல இப்படி ஒரு படத்தை தயாரிப்பது அவர்களை வாழ வைக்கும் இந்த சமூகத்துக்கு பிரதி உபகாரமாக, நன்றிக் கடனாக இருக்கும்.